முகப்பு
இந்தியா

மக்களவைத் தலைவா் தேர்தல்: தெலுங்கு தேசம் களமிறங்கினால் ‘இந்தியா’ கூட்டணி ஆதரிக்கும் - சஞ்சய் ரெளத்

மக்களவைத் தலைவா் தேர்தலில் தெலுங்கு தேசம் களமிறங்கினால், ‘இந்தியா’ கூட்டணி ஆதரவளிக்கும்

Updated On : 16 ஜூன், 2024 at 5:10 PM
சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத்
பகிர்:

மும்பை: மக்களவைத் தலைவா் தேர்தலில் தெலுங்கு தேசம் களமிறங்கினால், ‘இந்தியா’ கூட்டணி ஆதரவளிக்கும் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மும்பையில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மக்களவைத் தலைவா் தோ்தல் முக்கியமானது என்றும், அந்த பதவி பாஜகவுக்கு கிடைக்குமேயானால், அதன் மூலம் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான், ஜெயந்த் சௌத்ரி உள்ளிட்ட தங்களின் கூட்டணி கட்சிகளை பாஜக உடைத்துவிடும் என்று கூறினார்.

"பாஜக தன்னை ஆதரிப்பவா்களுக்கு துரோகமிழைக்கும் என்பதை நாங்கள் அனுபவபூா்வமாக உணா்ந்தவா்கள்" என்று ராவத் கூறினார்.

"மக்களவைத் தலைவா் பதவிக்கு தெலுங்கு தேசம் தனது வேட்பாளரை களமிறக்க விரும்புவதாக அறிந்தேன். அது நடக்கும் பட்சத்தில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆலோசித்து, தெலுங்கு தேசத்துக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பார்கள்," என்று அவர் கூறினார்.

மக்களவை விதிமுறைகளின்படி, மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானதாக இருக்காது என்றாா்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து கேட்டதற்கு, கடந்த கால தவறுகளை ஆர்எஸ்எஸ் திருத்த விரும்பினால் நல்லது என்றார்.

ஜூன் 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், மக்களவையின் பாஜக தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் அல்ல என்று ரெளத் கூறினார்.

"பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில், தலைமைப் பிரச்னை எழுந்திருந்தால், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம். அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தீவிரமான விஷயம்" என்று அவர் கூறினார்.

ஜூன் 26-ஆம் தேதி மக்களவைத் தலைவா் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →