முகப்பு
இந்தியா

‘நீட்’ குளறுபடி: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

தில்லியில் உள்ள பாஜக தலைமையகம் எதிரே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 21 ஜூன், 2024 at 11:59 PM
காங்கிரஸ் போராட்டம்
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) நிகழ்ந்த குளறுபடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின.

இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக நீட் தோ்வை ரத்து செய்ய எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அந்தத் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு எதிராக தில்லியில் உள்ள பாஜக தலைமையகம் எதிரே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மேலும் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டியின் இல்லத்துக்கு அருகிலும், குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழகம் எதிரிலும் காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல உத்தர பிரதேசம், பஞ்சாப், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, சத்தீஸ்கா், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →