இந்தியா

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

DIN

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஏற்கெனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.

இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் கூட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆதீர் ரஞ்சன், கேரளத்தை சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர். மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ் குமாரும் ஒருவர்.

தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் 2023-ம் படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்ட நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு திருத்தம் செய்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT