உத்தரப் பிரதேசத்தில் பாஜக மூத்தத் தலைவர் புனித் தியாகி மீது நடிகை ஒருவர், பாலியல் குற்றம் சாட்டியதால், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூரில் பாஜகவின் நகரப் பிரிவின் தலைவராக இருந்து வந்த புனித் தியாகி மீது, நடிகை ஒருவர் பாலியல் குற்றம் சாட்டி, தனது சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டார். குஜராத்தி, போஜ்புரி, ஹிந்தி மொழிகளில் சுமார் 250 படங்களில் நடித்துள்ள மும்பையைச் சேர்ந்த நடிகை, தன்னை நீண்ட காலமாக பாஜக தலைவர் பாலியல் ரீதியாக சுரண்டியதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
நடிகை, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது ``எனது கணவருடனான உறவை முறித்த பிறகு, நான் எனது மகனுடன் மும்பையில் தனியாக வசித்து வந்தேன். இந்த நிலையில்தான், பாஜக தலைவரான புனித் தியாகி, என்னுடைய மகனுக்கு அடிக்கடி பரிசுகளை வழங்குவதன் மூலம், எனது மகனுடன் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.
மேலும், எனக்கும் பூங்கொத்துகள் மற்றும் பிற பரிசுகளையும் அனுப்பத் தொடங்கினார். என் மகனுடனான புனித் தியாகியின் நெருக்கம் மற்றும் என்னுடனான நல்ல நடத்தை ஆகியவை என் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்று நினைக்கத் தூண்டியது.
இதையும் படிக்க: பஹ்ரைச் வன்முறை: என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக் கொலை!
நாங்கள் சில மாதங்களாக நெருங்கிய உறவையும் கொண்டிருந்தோம். ஆனால், சில காலங்களிலேயே அவர் தன்னைத் தூர விலக்கிக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், நட்டா ஆகியோரிடமும் புகார் அளித்தேன்; ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நடிகையின் குற்றச்சாட்டை மறுத்த புனித் தியாகி, பதவி விலகுவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தின் பாஜக தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரியிடம் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார். புனித் தியாகி, தனது ராஜிநாமா கடிதத்தில் ``எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகளால் எங்கள் கட்சியின் பிம்பம் புண்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால், நான் எனது ராஜிநாமாவை சமர்ப்பிக்கிறேன். இதுகுறித்த உண்மை விரைவில் வெளிவரும்.
இந்த விவகாரத்தில் எனது கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன். நான் முற்றிலும் அப்பாவி’’ என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், புகார் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ரோஹித் சிங் சஜ்வான் தெரிவித்தார்.தை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.