நாட்டிலேயே நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே தொகுதி வயநாடு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தின் வயநாட்டு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வயநாடு மக்களைவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுடன், அவரது தாய் சோனியா, கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியுடன் பிரியங்கா ஊர்வலமாக வந்து மக்களிடையே உரையாற்றினார். அதன்பின்னர் ராகுல் உரை நிகழ்த்தினார்.
பேரணியில் ராகுல் பேசியது,
நாட்டிலேயே இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே தொகுதி வயநாடாகும்.
பிரியங்கா வயநாட்டின் அதிகாரப்பூர்வ எம்பியாகவும், நான் அதிகாரப்பூர்வமற்ற எம்பியாகவும் இருப்போம். இருவரும் இணைந்து வயநாட்டு மக்களைக் காக்கப் பாடுபடுவோம் என்று கல்பெட்டாவில் நடைபெற்ற மாபெரும் சாலைப் பேரணியில் தெரிவித்தார்.
கடந்த 2019 முதல் 2024 வரை வயநாடு மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராகுல், வயநாட்டு மக்கள் தனக்குத் தேவைப்படும்போது தன்னைப் பாதுகாத்துக் கவனித்துக்கொண்டதைப் போல, தனது சகோதரிக்கும் ஆதரவளிக்க வேண்டும்.
வயநாடு மக்களுடன் எனக்கும் உள்ள உறவை நீங்கள் அனைவரும் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பாதுகாத்ததுப் போன்று என் சகோதரியையும் கவனித்து அவளைப் பாதுகாக்குமாறு வயநாடு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பிரியங்கா தனது முழு ஆற்றலையும் வயநாட்டின் பிரச்னைகளில் ஈடுபடுத்தி மக்களான உங்களைப் பாதுகாப்பார். மேலும் வயநாட்டில் நான் அதிகாரப்பூர்வமற்ற எம்பியாக இருந்தாலும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளில் தலையிட்டு உரிமையோடு தீர்க்க முன்வருவேன். வயநாட்டு மக்களைத் தனது குடும்பமாகக் கருதுகிறார் என் சகோதரி என்று அவர் பேசினார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல்முறையாக களம் காண்கிறார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார்.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.