ஸ்டாலின் தலைமையேற்றால் ராகுல் பிரதமராவார்! காங்கிரஸ் மூத்த தலைவர்
இந்தியா கூட்டணி, காங்கிரஸ் குறித்து மணிசங்கர் அய்யர் பேசியது பற்றி...
இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே சிறந்த நபர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட மணிசங்கர் அய்யர், கேரள முதல்வராக மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்தும், இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை ஒருங்கிணைப்பாளராக்க வேண்டும் என்றும் மணிசங்கர் அய்யர் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
”இந்தியா கூட்டணி ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் மு.க. ஸ்டாலின் என்று நான் நினைக்கிறேன். நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக காமராஜரிடம் கேட்டபோது அவர் ஒரு வாக்கியத்தைக் கூறினார் - “ஆங்கிலம், ஹிந்தி இல்லாமல் எப்படி?”. இதே நிலையில்தான் ஸ்டாலினும் இருக்கிறார்.
இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் தனது முழு நேரத்தையும் செலவிட யாராவது இருந்தால் ராகுல் காந்தியால் பிரதமராக முடியும். கடந்த ஓராண்டாக இந்தியாவில் கூட்டாட்சிக்கு பொருத்தமாக ஒவ்வொரு விஷயத்தை ஸ்டாலின் எழுப்பி வருகிறார். எனவே, இந்தியா கூட்டணியின் தலைவராக வருவதற்கு அவர்தான் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு அவர் தடையாக இருக்க மாட்டார்.
சர்தார் படேல் அளவுக்கு கே.சி. வேணுகோபால் போன்ற ரெளடியை ஒரு கட்சி வைத்திருந்தால் கட்சியின் நிலை என்னவாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் தலைவர்களைக் கொண்ட ஒரு கட்சிக்கு யார் வாக்களிக்கப் போகிறார்கள்? காங்கிரஸ் தலைமையில் என்ன நடக்கிறது என்று கேரள மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா? குறைந்தபட்சம், பினராயி அரசாங்கத்தில் ஒழுக்கமாவது இருக்கிறது.
நேரு, காந்திக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாளர். சுபாஷ் சந்திர போஸும் காந்திக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாளர். ஆனால், நேருவை காந்தி பிரதமராக்கினார். ஆகஸ்ட் 17, 1945 அன்று நடந்த விமான விபத்தில் சுபாஷ் போஸ் உயிர் பிழைத்திருந்தால், அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகி இருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் அதிருப்தியை அப்படித்தான் கையாண்டார்கள். தற்போதைய காங்கிரஸ் அதை எப்படி எதிர்கொள்கிறது?” எனத் தெரிவித்துள்ளார்.
If Stalin takes over, Rahul will become Prime Minister! Senior Congress leader
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.