இந்தியாவில் நடப்பு பருவகாலத்தில் பருவமழைப்பொழிவு இதுவரை இயல்பான அளவையொட்டியே பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் விவசாயத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை முக்கியமாகும். நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர் பருவமழைப்பொழிவை நம்பியே இருக்கின்றனர். 18.2 சதவீத ஜிடிபி இதன்மூலம் ஈட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. குடிநீருக்கான முக்கிய ஆதாரமாகவும் பருவமழை விளங்குகிறது.
ஆனால், நடப்பு பருவகாலத்தில் மழையளவு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு பதிவாகும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலிருந்து, “வடகிழக்கு பகுதிகள் இயல்பைவிட குறைவான மழைப்பொழிவையே பெற்றிருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இதே நடைமுறையே நீடித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைக்காலத்தின் பிற்பகுதியான ஆகஸ்ட் - செப்டம்பரில், இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதனை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.
தில்லி, அதன் புறநகர்ப் பகுதிகளில் ஜூலை பிற்பாதி மற்றும் ஆகஸ்ட்டில் முன்பாதிவரை கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் பல இடங்களில் மழைநீர் தேங்கும் அளவுக்கு கடும் மழைப்பொழிவு இருந்ததும் கவனிக்கத்தக்கது.
இமயமலையின் மேற்கு பகுதிகள், அதிலும் குறிப்பாக ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு, கடும் வெள்ளப்பெருக்கு, பரவலாக நிலச்சரிவுகள் ஆகிய இயற்கைச் சீற்றங்கள் இந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
நாட்டில் வடக்கு, மத்திய, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் மொத்தம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகாலத்தில் பெய்யும் மொத்த மழையளவில் நெடுங்கால சராசரி அளவில் ±19 சதவீதத்துக்குள் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. (அதாவது, 19 சதவீதத்துக்கும் சற்று கூடுதல் அல்லது குறைவாக அல்லது அதையொட்டி...)
உத்தரப் பிரதேசம்(478.0 மி.மீ; இயல்பைவிட 11% அதிகம்),
மகாராஷ்டிரம் (585.2 மி.மீ; சுமார் 9% இயல்பைவிட குறைவு)
கர்நாடகம் (587.8 மி.மீ; 10% இயல்பைவிட அதிகம்).
அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம், பிகாரில் குறைவான மழைப்பொழிவே பதிவாகியுள்ளது.
அருணாசல பிரதேசம் 652.1 மி.மீ - (இயல்பான அளவு 1081.0 மி.மீ, ஆக இது இயல்பைவிட 40% குறைவு)
அஸ்ஸாம் 603.8 மி.மீ (இயல்பைவிட 37% குறைவு)
மேகாலயா 978.7 மி.மீ (இயல்பைவிட 45% குறைவு)
சிக்கிம் 837.4 மி.மீ (இயல்பைவிட 20% குறைவு)
பிகார் 438.3 மி.மீ (இயல்பைவிட 25% குறைவு)
5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதீத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஜார்க்கண்ட்(853.7 மி.மீ; இயல்பைவிட 41% அதிகம்),
தில்லி(433.5 மி.மீ; இயல்பைவிட 37% அதிகம்),
ராஜஸ்தான்(430.6 மி.மீ; இயல்பைவிட 58% அதிகம்),
மத்திய பிரதேசம்(745.3 மி.மீ; இயல்பைவிட 30% அதிகம்)
புதுச்சேரி(258.2 மி.மீ; இயல்பைவிட 32% அதிகம்).
லடாக் யூனியன் பிரதேசத்தில் இயல்பைவிட 115% அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்தப் பருவகாலத்தில் இயல்பான மழையளவு 14.8 மி.மீ. ஆனால் பதிவாகியுள்ள அளவு 31.8 மி.மீ.
எந்தவொரு மாநிலமோ யூனியன் பிரதேசமோ ”அதிக பற்றாக்குறை” பிரிவில் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
ஜூன் 1 - ஆகஸ்ட் 10 வரை, இந்தியாவில் பரவலாக 539 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்தக் காலத்தில் இயல்பான மழையளவு 535.6 மி.மீ. ஆக, இது நெடுங்கால சராசரி அளவில் 1 சதவீதம் அதிகம்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கணக்கிடப்பட்டுள்ள மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ள மழைப்பொழிவு விவரத்தின்படி பிரித்துப் பார்க்கும்போது :
25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் “இயல்பான அளவு” பிரிவிலும் - (இயல்பைவிட 19%க்குள் மழைப்பொழிவு பதிவு)
5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் “பற்றாக்குறை” பிரிவிலும் - (இயல்பான அளவைவிட 20 to 59% குறைவு),
5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் “அதிக அளவு” பிரிவிலும் - (இயல்பான அளவைவிட 20 to 59% அதிகம்)
ஒரேயொரு யூனியன் பிரதேசம் - லடாக் “அதீத அளவு” பிரிவிலும் - (இயல்பான அளவைவிட 60% அதிகம்) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.