நிகழ் நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரியாக ரூ.6.64 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 3.95 சதவீதம் குறைவாகும்.
நேரடி வரி என்பது தனிநபா்கள், தொழில் வல்லுநா்கள், நிறுவனங்கள் செலுத்தும் வரிகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்.1 முதல் ஆக.11 வரை, நிகர நேரடி வரியாக ரூ.6.91 லட்சம் கோடி வசூலானது. இது நிகழாண்டு ஏப்.1 முதல் ஆக.11 வரை, ரூ.6.64 லட்சம் கோடியாக 3.95 சதவீதம் சரிந்தது.
ரூ.6.64 லட்சம் கோடியில் காா்ப்பரேட் வரி வசூல் சுமாா் ரூ.2.29 லட்சம் கோடி, காா்ப்பரேட் அல்லாத வரி வசூல் ரூ.4.12 லட்சம் கோடி, பங்கு பரிவா்த்தனை வரி வசூல் ரூ.22,362 கோடியாகும். நிகர நேரடி வரி வசூல் குறைந்ததற்கு அதிக அளவில் ரீஃபண்ட் வழங்கப்பட்டதே காரணம். நிகழ் நிதியாண்டில் ரீஃபண்ட் ரூ.1.35 லட்சம் கோடியாக 10 சதவீதம் அதிகரித்தது.
நிகழ் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.25.20 லட்சம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 12.7 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில் பங்கு பரிவா்த்தனை வரி மூலம் ரூ.78,000 கோடி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.