முக்கிய பிரச்னைகளை விட்டுவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடக உரையை நிகழ்த்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “எதிர்க்கட்சியினர் பிரச்னைகளை முன்வைக்க வேண்டும். நாடகம் செய்யக் கூடாது. நாடகம் செய்வதற்கு வேறு இடங்கள் உள்ளன. அவையில் மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்த வேண்டும். பிகார் தேர்தல் தோல்வியின் போதே நாடகம் நடத்திவிட்டீர்கள்.” என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், மோடிக்கு பதிலளித்து மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், நாடாளுமன்றத்துக்கு வெளியே முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நாடக உரையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஒழுக்கத்தையும் நாடாளுமன்ற அமைப்பையும் தொடர்ந்து மத்திய அரசு நசுக்கி வருகின்றது என்பதுதான் உண்மை.
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டும் குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களிலும், சில மசோதாக்கல் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்கள், ஜிஎஸ்டி, பிஎன்எஸ்எஸ் போன்ற மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புல்டோசர் மூலம் நீங்கள் எப்படி கொண்டுவந்தீர்கள் என்பதை முழு நாடும் கண்டிருக்கிறது.
மணிப்பூர் பிரச்னை எழுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் வரை நீங்கள் அமைதியாக இருந்தீர்கள்.
பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். 'வாக்கு திருட்டு' உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன, நாங்கள் அவற்றை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்.
இந்த கவனச்சிதறல் நாடகத்தை நிறுத்திவிட்டு, மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பாஜகவினர் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.
சாதாரண மக்கள் வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்களை சூறையாடுதல் ஆகியவற்றால் போராடி வருகின்றனர், அதே நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தின் ஆணவத்தில் நாடகமாடி வருகின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.