முகப்பு
இந்தியா

அவைத் தலைவர் என்பவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவரும்தான்! கார்கே

மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து கார்கே உரை...

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:10 AM
மல்லிகார்ஜுன கார்கே - SANSAD
பகிர்:

மாநிலங்களவைத் தலைவர் என்பவர் அரசை மட்டுமல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும்தான் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடரில் முதல்முறையாக மாநிலங்களவைத் தலைவராக அவைக்கு வந்து கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்தினார்.

அவரை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதைத் தொடர்ந்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

அவர் பேசியதாவது:

”மாநிலங்களைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எனது சார்பாகவும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறேன்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பின்வரும் கூற்றுகளை மேற்கோள் காட்டுவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன். மே 16, 1952 அன்று, அவர், "நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல" என்று கூறினார். பலர் நீங்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறுவதால் இதைச் சொல்கிறேன்.

எதிர்க்கட்சிகளை அரசாங்கத்தின் கொள்கைகளை நியாயமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் விமர்சிக்க அனுமதிக்காவிட்டால், ஒரு ஜனநாயகம் ஒரு கொடுங்கோன்மையாகச் சீரழிந்துவிடும் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒருதரப்பினருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில் அது ஆபத்தானது. எதிர்க்கட்சியினரை பார்க்காமல் இருப்பதும் ஆபத்தானது. இரு தரப்பிலும் சமநிலையைப் பேணுவது நல்லது.

நீங்கள் பாரபட்சமற்றவராக இருப்பீர்கள், எதிர்க்கட்சியையும் சமமாக நடத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

உங்களுக்கு முன்னதாக மாநிலங்களவைத் தலைவர் பதவியில் இருந்து எதிர்பாராத விதமாகவும், திடீரெனவும் வெளியேறிய ஜகதீப் தன்கரை வழியனுப்பும் வாய்ப்பு அவைக்கு கிடைக்காமல் போனது வருத்தமளிக்கிறது. மாநிலங்களவைத் தலைவர், முழு அவையின் பாதுகாவலராக இருப்பதால், அரசைப் போலவே எதிர்க்கட்சியையும் சேர்ந்தவர். இருப்பினும், முழு எதிர்க்கட்சியின் சார்பாகவும், ஜகதீப் தன்கருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்தார்.

summary

The Speaker of the House is also from the opposition party! Kharge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.