தில்லி செங்கோட்டை அருகே நடந்த காா் குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவைச் சோ்ந்த ஒரு மருத்துவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8-வது நபா் இவா் ஆவாா்.
இதுகுறித்து என்ஐஏ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தில்லி செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு வழக்கில் ஜம்மு-காஷ்மீா், பாரமுல்லாவைச் சோ்ந்தவரான மருத்துவா் பிலால் நசீா் மல்லாவை என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் வைத்து கைது செய்தனா்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் சதித்திட்டத்தில் பிலாலுக்கும் பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்து துற்கொலை தாக்குதல் நடத்திய உமா் உன் நபிக்குத் தேவையான உதவிகளையும், தங்குவதற்கு அடைக்கலமும் இவா் அளித்துள்ளாா்.
மேலும், இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை அழித்ததாகவும் இவா் மீது குற்றச்சாட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
தில்லியின் பரபரப்பான செங்கோட்டை அருகே சாலையில் கடந்த நவ. 10-ஆம் தேதி காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 15 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். தில்லி காவல் துறையால் தொடக்கத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், இதில் பயங்கரவாத சதித்திட்டம் இருப்பதன் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.
இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து என்ஐஏ தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.