இண்டிகோ விமான சேவையை 5% குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவை தொடர்ந்து 8-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் இண்டிகோ நிறுவனத்திற்கு போதிய அறிவுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இண்டிகோ விமான பிரச்னை குறித்து மக்களவையில் பேசினார்.
இந்நிலையில் விமான சேவையில் மக்களின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், தற்போது இயக்கப்படும் விமானங்களில் 5% விமானங்களைக் குறைக்க இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
அதாவது தற்போதைய விமான சேவை அட்டவணையின்படி இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்க முடியவில்லை என்பதால் விமான சேவையை 5% குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இண்டிகோவில் 2,300 விமானங்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 115 விமானங்கள் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு விமான சேவைகளைக் குறைக்க வேண்டும் என்றும் திருத்தப்பட்ட விமான சேவைகளின் பட்டியலை நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
அக்டோபரில் 15,014 வாராந்திர விமான சேவைகளுக்கு ஒப்புதல் அளித்த போதிலும் விமான நிறுவனம் அவ்வளவு விமானங்களை இயக்க முடியவில்லை என்றும் டிஜிசிஏ கூறியுள்ளது.
மேலும் வரும் நாள்களில் மேலும் 5% விமானங்கள் சேவை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த அக்டோபரில் ஏர் இந்தியா, ஏஐ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு விமானங்கள் குறைக்கப்பட்டு இண்டிகோவுக்கு விமான சேவைகளை அதிகரித்து மத்திய அரசு ஒப்புதஹ்ல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. விமான ஊழியர்களின் எண்ணிக்கையை சரிபார்க்காமால் ஏன் கூடுதல் விமானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.