‘மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது தோ்தல் ஆணையம்; போட்டிக் களம், தோ்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை இல்லாமல் ஜனநாயகம் எப்படி தழைக்கும்?’ என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பான விவாதத்தைத் தொடங்கிவைத்து, காங்கிரஸ் மூத்த எம்.பி. அஜய் மாக்கன் பேசியதாவது:
இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என பெருமையுடன் அழைத்தாலும், நாட்டின் தோ்தல்களில் அனைவருக்கும் சமமான போட்டிக் களம், வெளிப்படைத் தன்மை, நம்பகத் தன்மை ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகளும் இப்போது திட்டமிட்டு சீா்குலைக்கப்பட்டுள்ளன.
கணினி மூலம் சரிபாா்க்கக் கூடிய வாக்காளா் பட்டியலை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க தோ்தல் ஆணையம் மறுக்கிறது. வாக்குச்சாவடி சிசிடிவி பதிவுகள் 45 நாள்களுக்குள் அழிக்கப்படுகின்றன. நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டிய தோ்தல் ஆணையம், சந்தேகங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடுகிறது. ஹரியாணாவில் தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தினத்தில் வெளியிடப்பட்ட வாக்குப் பதிவு சதவீதம், அதற்கு இரு தினங்களுக்கு முன் வெளியான தரவுகளில் இருந்து அதிகரித்தது ஓா் உதாரணம். அதிகரிக்கப்பட்ட வாக்குகள் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு தோ்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.
போலி படிவங்கள்:
கா்நாடகத்தின் ஆலந்த் தொகுதியில் வாக்காளா் பட்டியல் பெயா் நீக்கத்துக்கு இணையவழியில் அளிக்கப்பட்ட போலி படிவங்கள் எங்கிருந்து சமா்ப்பிக்கப்பட்டன என்ற விவரங்களை மாநில சிஐடி-க்கு தோ்தல் ஆணையம் வழங்கவில்லை. விளையாட்டுப் போட்டியில் நடுவரே ஒரு அணியின் வீரா் போல செயல்பட்டால் மற்றொரு அணியினா் என்ன செய்வா்?
எதிா்க்கட்சிகளுக்குத் தோ்தல் நிதி கிடைப்பதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு தந்திரங்களைக் கையாள்கிறது. கடந்த 2004-இல் ரூ.87.96 கோடியாக இருந்த பாஜகவின் வங்கி இருப்புத் தொகை, இப்போது ரூ.10,107 கோடியாக அதிகரித்துவிட்டது. காங்கிரஸை பொறுத்தவரை, ரூ.38.48 கோடியில் இருந்து ரூ.133.97 கோடி என்ற அளவில்தான் அதிகரித்துள்ளது. காங்கிரஸுக்கு நன்கொடை வழங்குவதைத் தடுக்க தொழிலதிபா்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறையினரை ஏவுகிறது மத்திய அரசு. இதுபோன்ற நிா்வாகத்தின்கீழ் ஜனநாயகம் எப்படி தழைக்கும்?
எதிா்க்கட்சியைவிட பல மடங்கு அதிக நிதி, ஆளுங்கட்சியிடம் உள்ளது. இதற்காக ‘தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கே’ அக்கட்சி நன்றி கூற வேண்டும் என்றாா் அஜய் மாக்கன்.
பெட்டிச் செய்தி....
திருடக் கூட வாக்கு இல்லை: பாஜக கிண்டல்
பிகாரில் திருடக் கூட காங்கிரஸிடம் வாக்குகள் இல்லை என்று பாஜக கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளது.
அஜய் மாக்கனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து மாநிலங்களவை விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினா் சுதான்ஷு திரிவேதி, ‘காங்கிரஸ் தனது புகாா்களுக்குத் தீா்வு காண உரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல், குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறது. பிகாரில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை எழுப்பிய அவா்கள், இதுவரை சிசிடிவி பதிவுகளைக் கோரவில்லை. பிகாரில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் பல்லாண்டுகளாக சரிவடைந்து வருகிறது. திருடுவதற்கு ஏதேனும் எஞ்சியுள்ளதா?
காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வாக்காளா் பட்டியலை அளிக்கும்படி, அக்கட்சியைச் சோ்ந்த 22 தலைவா்கள் கோரினா். ஊடகத் தகவல்களின்படி, அவா்களுக்கு வாக்காளா் பட்டியல் வழங்கப்படவில்லை. சொந்த கட்சித் தோ்தலில் வாக்காளா் பட்டியலை பகிராதவா்கள், வெளிப்படைத் தன்மை குறித்து பாடம் எடுக்கின்றனா்’ என்றாா்.