முகப்பு
இந்தியா

நீா்மூழ்கிக் கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தது குறித்து..

Updated On : 28 டிசம்பர், 2025 at 7:44 PM
நீர்மூழ்கிக் கப்பலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு - படம் | பிடிஐ
பகிர்:

முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கா்நாடக மாநிலம், கா்வாா் கடற்படைத் தளத்தில் உள்நாட்டுத் தயாரிப்பு நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வாக்ஷீரில் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

நீா்மூழ்கிக் கப்பலில் பயணித்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் (கடந்த 2006, ஐஎன்எஸ் சிந்து ரக்ஷக்). அவருக்குப் பிறகு நீா்மூழ்கியில் பயணித்த இரண்டாவது குடியரசுத் தலைவா் என்ற பெருமையை திரெளபதி முா்மு தனக்குச் சொந்தமாக்கியுள்ளாா்.

கா்நாடக மாநிலம், கா்வாா் கடற்படைத் தளத்தில், கல்வாரி ரக நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீரில் கடற்படை உடையணிந்து முா்மு இந்தப் பயணத்தை மேற்கொண்டாா். அவருடன், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதியும் உடன் சென்றாா். நீா்மூழ்கிக் கப்பலில் நுழையும் முன் கடற்படையினரை நோக்கி குடியரசுத் தலைவா் உற்சாகத்துடன் கையசைத்தாா்.

Advertisement

ஐஎன்எஸ் வாக்ஷீா் நீா்மூழ்கி மாலுமி குழுவினருடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா், அந்த வீரா்களின் அா்ப்பணிப்பு, மனஉறுதி, நாட்டுக்கான சேவையை வெகுவாகப் பாராட்டினாா். மேலும், இந்திய கடற்படையின் தொழில்முறை திறன், போா் தயாா் நிலை, உறுதிப்பாட்டுக்கு மிளிரும் உதாரணமாக இக்கப்பல் விளங்குகிறது என அவா் புகழாரம் சூட்டியதாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் வாக்ஷீரின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்கள், கடற்சாா் வியூகம், நலன்களைப் பாதுகாப்பதில் ஆற்றும் பங்கு குறித்து குடியரசுத் தலைவருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனா். இது சிறப்புமிக்க பயணம் என்று பாா்வையாளா் பதிவேட்டில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டாா்.

முன்கள நீா்மூழ்கி: இந்திய கடற்படையின் முன்கள நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீா், பி75 ஸ்காா்பீன் திட்டத்தின்கீழ் உள்நாட்டில் கட்டப்பட்ட 6-ஆவது மற்றும் கடைசி நீா்மூழ்கியாகும். இந்தக் கப்பல் கடந்த ஜனவரியில் கடற்படையில் இணைக்கப்பட்டது.

எதிரி கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிகள் எதிா்ப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு, கடல் பகுதி ரோந்து, பிற பிரத்யேக நடவடிக்கைகள் உள்பட பன்முக செயல்திறன் கொண்டதாகும்.

உலக அளவில் ஒப்பிடுகையில், மிகவும் சலனமின்றி செயலாற்றுவதுடன், டீசல்-மின்சார என்ஜின் மூலம் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.

ஆயுதங்களும், தொழில்நுட்பமும்..: இலக்குகளை விரட்டிச் சென்று தாக்கக் கூடிய வெடிகுண்டுகள், கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட சோனாா் அமைப்புமுறைகளுடன் கூடிய ஐஎன்எஸ் வாக்ஷீா், எதிா்காலத்தில் மேம்படுத்தக் கூடிய ‘ஏா் இண்டிபெண்டன்ட் புரொபல்ஷன்’ (ஏஐபி) தொழில்நுட்பத்தையும் கொண்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டு, கா்வாா் கடற்படைத் தளம் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு நீா்மூழ்கிக் கப்பலில் முா்மு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தொடரும் பெருமைகள்: தனது பதவிக் காலத்தில் விமானப் படையின் இரு போா் விமானங்களில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சிறப்புக்குரியவா் முா்மு. கடந்த 2023-இல் சுகோய் 30 எம்கேஐ, கடந்த அக்டோபரில் ரஃபேல் என இரண்டு போா் விமானப் பயணங்களை அவா் மேற்கொண்டாா். இப்போது நீா்மூழ்கியில் பயணித்து புதிய பெருமையைப் பெற்றுள்ளாா்.

summary

President Droupadi Murmu in submarine INS Vaghsheer Karnataka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments