மகா கும்பமேளா குறித்து அவதூறாகப் பேசியதற்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கடந்த மாத இறுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்; 60- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே இரு நாள்களுக்கு முன்பு தில்லி ரயில்வே நிலையத்தில் கும்ப மேளாவுக்குச் செல்லும் ரயில்களைப் பிடிப்பதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் மாநில அரசு எந்த ஏற்படும் செய்யவில்லை, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைக்கிறது, மகா கும்பமேளா, 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார், மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
'மகா கும்பமேளா பற்றி மமதா பானர்ஜி பேசியது குற்றம், சட்டப்பேரவை குறிப்பில் இருந்து மமதா பானர்ஜி பேசியதை நீக்க வேண்டும்' என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்கள் முன்பாக மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மமதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும், மமதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.