செய்தியாளர்களுடன் பேசிய சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அர்பித் சுக்லா  
இந்தியா

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இன்று ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவிருப்பதாக முதல்வர் பகவந்த் மான் நேற்று (பிப். 28) அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாப் காவல்துறையினர் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ள 369 மையங்களை இலக்காகக் கொண்டு 28 மாவட்டங்களில் 798 இடங்களில் சோதனைகள் நடத்தினர்.

சந்தேகத்திற்கிடமான 2000-க்கும் மேற்பட்ட நபர்களை காவல் குழுக்கள் சோதனை செய்து 27 பேர் மீது தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 முக்கியக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

28 மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நான்கு மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில் 8.14 கிலோ ஹெராயின், 1.21 கிலோ ஓபியம், 3.5 கிலோ கஞ்சா, 19 கிலோ பாப்பி ஹஸ்க், 700 கிராம் சராஸ், 16,238 போதை மாத்திரைகள், ரூ.8.02 லட்சம் மதிப்புள்ள பணம் ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

900க்கும் மேற்பட்ட காவல் குழுக்களில் 8,368 அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய டிஜிபி கௌரவ் யாதவ், “முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு பஞ்சாபை போதையில்லா மாநிலமாக மாற்றி, போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் 360 டிகிரி செயல் திட்டத்தை வகுத்துள்ளது. போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின்கீழ் அனைத்து வழக்குகளின் தொடர்புகளைக் கண்டறிந்து, கடத்தல்காரர்களுடன் கூட்டுச் சேர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கியுள்ள பகுதிகளில் நடவடிக்கையை உன்னிப்பாகத் திட்டமிடவும், சோதனைகளை நடத்தவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அர்பித் சுக்லா தெரிவித்தார். அதுமட்டுமின்றி போதைப்பொருள் பயன்பாடு ஒழிக்கப்படும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக்குழுவின் தலைவரான பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, ”போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த நான் உள்பட அமன் அரோரா, தருண்ப்ரீத் சிங், லால் ஜீத் சிங் புல்லர் ஆகிய நான்கு அமைச்சர்களுக்கு தனித்தனியே மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவார்” என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தனி நடவடிக்கையில் கரண்பால் சிங் (37) , ரஞ்சித் சிங் (36) ஆகிய இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ ஹெராயினை மீட்டனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர் ஒருவர் எல்லையைத் தாண்டி ட்ரோன்களைப் பயன்படுத்தி சரக்குகளை அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்! யாரைச் சொல்கிறார் கமல்?

பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா? - நயினார் நாகேந்திரன் பதில்!

அனுமனைத் தவறாக பேசுவதா? ராஜமௌலி மீது புகார்!

பிகார் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர்! நிதீஷைப்போல இபிஎஸ் முதல்வராவார்! - திண்டுக்கல் சீனிவாசன்

பிரதமர் மோடி கோவை வருகை! விமான நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

SCROLL FOR NEXT