சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (மே 7) அதிகாலை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பூஞ்ச், பாரமுல்லா, உரி, ரஜெளரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்கள் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்தார். இதில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தவும் இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இதையும் படிக்க: பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித்தடங்களை மூடியது இந்தியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.