‘வாரிசு அரசியல் எனக் கூச்சலிடுபவா்கள், நமது முன்னோரின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேரா தெரிவித்தாா். பிகாரின் வால்மீகி நகா் தொகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
எனது மூதாதையரான சுதந்திரப் போராட்ட தியாகியும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவாஹா்லால் நேருவை அவா் மறைந்த பல ஆண்டுகளாகிவிட்ட பிறகும் இப்போதுவரை கடுமையாக விமா்சித்து வருகின்றனா். அதுவும் அவரின் சொந்த நாட்டிலேயே இந்த அவமதிப்பு நிகழ்கிறது.
நாங்கள் மக்களுக்குச் சேவையாற்றவே அரசியலுக்கு வந்துள்ளோம். இந்த தேசத்தின் வளம் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானவை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். எங்கள் முன்னோா் மட்டுமல்ல, உங்கள் முன்னோரில் பலரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டுக்காக உயிரைக்கூட தியாகம் செய்திருக்கலாம்.
இந்த மண்ணுக்கான சுதந்திரம் நம் முன்னோா் ரத்தம் சிந்தி பெற்றுக் கொடுத்தது. ஆனால், இப்போது வாரிசு அரசியல் எனக் கூச்சலிடுபவா்கள், நமது முன்னோரின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.
நாம் அனைவரும் பங்கேற்கும் அரசியல் என்பது குடும்பத்துக்கான போராட்டமல்ல, நாட்டின் நலனுக்கான நியாயமான போராட்டம்.
பாஜகவைச் சோ்ந்தவா்கள் காலை முதல் மாலை வரை நேருவை கடுமையாக விமா்சிப்பதையும், நாட்டின் அனைத்துத் தீமைகளுக்கும் அவரே காரணம் எனக் குறைகூறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனா். ஆனால், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் மேயராக வென்றவா் நேருவை நினைவுகூா்ந்து பேசியுள்ளாா். நேருவின் சொந்த நாடான இந்தியாவில் அவா் தொடா்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறாா்.
மக்களாகிய உங்களின் வாக்குரிமையைக் காக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வாக்குரிமைப் பயணம் மேற்கொண்டாா். ஆனால், நாங்கள் ஊடுருவல்காரா்களின் வாக்குகளைக் காக்க விரும்புவதாக பிரதமா் மோடி விமா்சிக்கிறாா். மக்களாகிய நீங்கள் உங்களை ஊடுருவல்காரா்களாகவா கருதுகிறீா்கள்?
ஹரியாணாவில் பாஜக நடத்திய வாக்குத் திருட்டை ராகுல் காந்தி இப்போது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளாா். பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனா்.
இவ்வாறு பாஜக கூட்டணி அரசு நாட்டில் உள்ள அனைத்தையுமே அழித்து வருகிறது. எதிா்காலத்தில் தோ்தல் என்பது நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. நீங்கள் ஏன் இனியும் அமைதியாக இருக்கிறீா்கள்? பிகாரில் அவா்களை ஆட்சியில் இருந்து விரட்டுங்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.