பிகாரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த தொகுதியில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது.
பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.14) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன.
அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததுக்கு எதிராக நடத்திய பேரணி சென்ற பல இடங்களில் பாஜக அபார வெற்றியைப் பதிவு செய்திருப்பது இந்தியா கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத திடீர் திருப்புமுனையாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தீவிரமாக முஸாபர்பூர் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
இந்தத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு 67,820 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான பிஜேந்திர சௌத்ரியைவிட 32,657 வாக்குகள் அதிகமாகப் பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்தார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிகாரின் சசாரம் நகரில் தொடங்கிய பேரணி, 16 நாள்கள் நடைபெற்று பாட்னாவில் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் பேரணியில் ராகுல் காந்தியுடன் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இருப்பினும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.