பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் வருகின்ற வியாழக்கிழமை மீண்டும் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் பலத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம்வகித்த பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 அதிகபட்சமாக தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இதனால், மீண்டும் பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பாரா? அல்லது பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகின்ற நவ. 20 வியாழக்கிழமை அன்று 10-வது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், சிராக் பாஸ்வான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிகார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 16, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 15 (முதல்வர் உள்பட), சிராக் பாஸ்வான் கட்சிக்கு 3, எச்ஏஎம்(எஸ்) மற்றும் ஆர்எல்எம் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளார்.
பிகாரில் இன்று நடைபெறும் தற்போதைய அமைச்சரவையில் கடைசிக் கூட்டத்தில் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.