பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமையவுள்ள நிலையில், பேரவைத் தலைவர் பதவியைப் பெற பாஜக - ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) உள்ளிட்ட இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் பேரவைத் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதீஷ்குமார் 10-வது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
பாட்னாவில் உள்ள காந்தி திடலில் நாளை மறுநாள் (நவ.20) பதவியேற்பு விழாவுக்காக ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. இதில், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், ஜேடியு தலைவர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் தலைமையிலான ஒரு கூட்டம் இன்று (நவ.18) மாலை தில்லியில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்களின் துறைகள் ஒதுக்கீடு, அவைத் தலைவர் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
அவைத் தலைவர் தேர்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜேடியு மற்றும் பாஜக இருவரும் முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில், பாஜக எதிர்பார்த்திருந்த முதல்வர் பதவி கிடைக்க பெறாத நிலையில், என்ன ஆனாலும், அவைத் தலைவர் பதவியையும், முக்கிய துறைகளையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என பாஜக மிகத் தீவிரம் காட்டுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, பாஜக தலைவர் நந்த் கிஷோர் யாதவ் பேரவைத் தலைவராகவும், ஜேடியுவின் நரேந்திர நாராயண் யாதவ் பேரவையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினர்.
தில்லியில் உயர்நிலை கூட்டத்துக்கு முன்னதாக, பாட்னாவில் ஜேடியு தலைவர்கள் சஞ்சய் குமார் ஜா, லாலன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் பதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி(ராம் விலாஸ்), ஜித்தன் ராம் மாஞ்சியின் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி உள்ளிட்டோருடன் தனித்தனி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் அடிப்படையில், ஒவ்வொரு ஆறு எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற அடைப்படையில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்தது.
பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வென்றது. அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி வெறும் 34 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டரை பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
பிகாரில் பாஜக சார்பில் அதிகபட்சமாக 16 அமைச்சர்களும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முதல்வர் நிதீஷ் குமார் உள்பட 14 அமைச்சர்களும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கட்சிக்கு 3 அமைச்சர்களும், முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவற்றுக்கு தலா ஓரிடமும் அமைச்சரவையில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.