இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்களை இன்று (நவ. 21) முதல் நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, முன்பு நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களையும் ஒருங்கிணைத்து ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு எனும் 4 புதிய சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களானது இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து கொண்டுவரப்பட்ட முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டதாவது:
“இன்று நமது அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர்கள் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இவை, நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் புதிய குறியீடுகள் மூலம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நேரத்தில் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.