கர்நாடகத்தில், 5 ஆண்டுகளும் சித்தராமையா முதல்வராகப் பதவி வகிப்பார் என்பதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி செய்யவேண்டும் என பாஜகவினர் சவால் விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி உயர்த்தப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் கருத்து பரவி வருகின்றது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியால் விலைவாசி உயர்ந்துள்ளது என விமர்சிக்கும் வகையில் இரண்டரை ஆண்டுகள்: கன்னடர்கள் மீது ஒரு பெரும் சுமை எனும் தலைப்பில் போஸ்டர் ஒன்றை பாஜகவினர் இன்று (நவ. 21) வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி விவகாரத்தில், முதல்வர் சித்தராமையாவே 5 ஆண்டுகளும் பதவியில் நீடிப்பார் என்பதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி செய்ய வேண்டும் என பாஜகவினர் சவால் விடுத்துள்ளனர்.
இதுபற்றி, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“தில்லி சென்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வேன் என முதல்வர் சித்தராமையா மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வளர்ச்சி நிதியை விடுவிக்க மாட்டேன் எனவும் அவர் மிரட்டியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒருபக்கம் டி.கே. சிவக்குமார் தில்லி சென்று அறிக்கை வெளியிடுகிறார். மறுபுறம், சித்தராமையா அவர்கள் ஏன் தில்லி சென்றார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார். இதுதான், காங்கிரஸ் கட்சியின் இரண்டரை ஆண்டுகள் சர்க்கஸ் காட்சிகளாகும்.
சித்தராமையாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களே இப்போது தில்லிக்குச் சென்று அவரை வேண்டாம் எனக் கூறுகின்றனர். ஆனால், கட்சிக்குள் எந்தவொரு குழப்பமும் இல்லை என முதல்வர் கூறுகிறார்” என அவர் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.