தில்லியிலுள்ள பள்ளிக் கல்வித் திட்டத்தில் ராஷ்ட்ரநீதி என்ற பெயரில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) பற்றியும் அதன் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நெறிமுறை நிர்வாகம் மற்றும் தேசிய பெருமையை அறிந்துகொள்ளும் நோக்கத்திலும் இதனைக் கொண்டுவரவுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் தில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு இன்று (அக். 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்வையொட்டிப் பேசிய தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட்,
''நாட்டின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். போன்று பல்வேறு அமைப்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. மாணவர்களிடையே குடிமை மற்றும் சமூக உணர்வை ஏற்படுத்துவது நமது கடமை. பாஜகவின் சித்தாந்த ஆதாரமான ஆர்.எஸ்.எஸ்., உலகின் மிகப்பழமையான அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத பங்காற்றியுள்ளது. ராஷ்ட்ரநீதி என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது.
இதனால், தில்லியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ராஷ்ட்ரநீதி பாடம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனுபவக் கற்றல் முறை மூலம் மாணவர்களுக்கு இது கற்பிக்கப்படும்.
மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, நெறிமுறை நிர்வாகம் மற்றும் தேசிய பெருமை வளர்க்கும் நோக்கத்தில் இதனைக் கொண்டுவரவுள்ளோம். இது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமைதோறும் இப்பாடம் மாணவர்களுக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.