ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டத்தில் காவல் உதவி துணை ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) சந்தீப் குமார் துப்பாக்கியால் சுட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த வாரம் இதே மாவட்டத்தில் பணியாற்றிய ஐஜி பூரண் குமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மற்றொரு காவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன்பாக சந்தீப் குமார் வெளியிட்ட 6 நிமிஷ விடியோவில் உயிரிழந்த பூரண் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
மேலும் அவர் எழுதியுள்ள 3 பக்க கடிதத்திலும் பூரண் குமார் பெயரை குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து காவல் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஹரியாணா காவல் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஐஜி பூரண் குமாரின் பெயரைப் பயன்படுத்தி அவரிடம் உதவியாளராக இருந்த தலைமைக் காவலர் சுஷீல்குமார் அண்மையில் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுபான ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் சுஷீல் குமாரை கைது செய்ததில் சந்தீப் குமார் முக்கியப் பங்காற்றினார்' என்றனர்.
சந்தீப் குமார் தற்கொலை செய்துகொண்ட இடத்தை ரோத்தக் காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) எஸ்.எஸ்.போரியா பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "சந்தீப்குமார் மிகவும் நேர்மையான அதிகாரி. அவர் வெளியிட்ட விடியோ குறித்து தற்போது பதிலளிப்பது கடினம். தடயவியல் நிபுணர்கள் விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்' என்றார்.
டிஜிபிக்கு கட்டாய விடுப்பு: முன்னதாக, கடந்த 7-ஆம் தேதி சண்டீகரில் உள்ள தனது வீட்டில் பூரண் குமார் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிவைத்த கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவர் (டிஜிபி) சத்ருஜித் கபூர் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்நீத் குமார் காவல் துறையில் புகாரளித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க 6 நபர் குழுவை சண்டீகர் காவல் துறை அமைத்தது. நரேந்திர பிஜார்னியா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பூரண் குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்வரை உடற்கூறாய்வுக்கு அனுமதி தர அவரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சத்ருஜித் கபூர் செவ்வாய்க்கிழமை முதல் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
உடனடி நடவடிக்கை: பிரதமர், முதல்வருக்கு ராகுல் வலியுறுத்தல்: பூரண் குமாரின் மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமார் மற்றும் அவர்களது இரு மகள்களையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பூரண் குமாரை நிலைகுலையச் செய்யும் நோக்கில் அவரிடம் தொடர்ந்து பாகுபாடு காட்டி வந்துள்ளனர். அவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய பிரதமர் நரேந்திர மோடியும் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், அறிவுடையவராகவும் திறமையுடையவராகவும் நல்ல பணியில் இருந்தாலும் தலித் என்ற காரணத்தால் அவரைப் பாகுபடுத்தும் சீர்கேடுகள் தொடரும் என்ற தவறான செய்தி கோடிக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளை சென்றடைவதை ஏற்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.