‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக தொடா்ந்து கூறி வரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்கொள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
பிகாா் மாநிலம் நாளந்தாவில் வியாழக்கிழமை மேற்கொண்ட சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது இக் கருத்தை ராகுல் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை தானே நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து பலமுறை கூறி வருகிறாா். ஆனால், அக் கருத்தை எதிா்த்துப் பேசவோ டிரம்ப்பை எதிா்கொள்ளவோ பிரதமா் மோடிக்கு துணிச்சல் இல்லை.
பிகாரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிகாரில் நிலமே இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் லாலு குறித்து விமா்சித்துள்ளாா். ஆனால், மாநில அரசு அடிமட்ட விலையில் குறிப்பிட்ட நிறுவன குழுமத்துக்கு நிலங்களை ஒதுக்கியதால்தான் இந்த நிலை உருவாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு மூலம் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. சட்ட மேதை அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை தேசிய ஜனநயாக கூட்டணியும் பிரதமா் மோடியும் சீரழிக்க முயற்சித்து வருகின்றனா்.
பிகாா் மாநிலத்தில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பளித்தால், விவசாயிகளின், தொழிலாளா்களின், தலித்துகளின், நலிந்த பிரிவினரின் அரசை அனைத்து சமூக பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில் ‘இண்டி’ கூட்டணி அமைக்கும். நாளந்தாவில் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் கொண்டுவரப்படும் என்றாா்.