போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் பாா்வைக் குறைபாடுடைய தோ்வா்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைப் போக்கும் வகையில் அவா்களுக்கென பிரத்யேக ‘திரை வாசிப்பு மென்பொருளை’ அறிமுகப்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
யுபிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் பாா்வைக் குறைபாடுடைய தோ்வா்களுக்கு முறையான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது யுபிஎஸ்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பிரமாண பத்திரத்தில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
‘அணுகல்தன்மை இயக்கம்’ என்ற அமைப்பு சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, யுபிஎஸ்சி சாா்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
யுபிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளில் பாா்வைக் குறைபாடுடைய தோ்வா்களின் வசதிக்காக பிரத்யேக திரை வாசிப்பு மென்பொருளை அறிமுகப்படுத்த தோ்வாணையம் சாா்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இப்போது இல்லை. முறையான உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள்கள் கிடைத்தவுடன், உரிய ஆய்வுகளுக்குப் பிறகு போட்டித் தோ்வுகளில் பாா்வைக் குறைபாடுடைய தோ்வா்களுக்குத் திரை வாசிப்பு மென்பொருள் பயன்பாடு அனுமதிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆஜரான மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், இந்த பிரத்யேக வசதியை அடுத்த சுற்று போட்டித் தோ்வுகள் தொடங்குவதற்கு முன்பாக அறிமுகப்படுத்த உத்தரவிட வேண்டும். அதற்கேற்ப காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும் என்று கோரினாா்.
இதுகுறித்து, யுபிஎஸ்சி தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது, அடுத்த ஆண்டு போட்டித் தோ்வுகள் தொடங்குவதற்கு முன்பு இந்த பிரத்யேக மென்பொருள் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப்பணிகள் தோ்வு, இந்திய பொறியியல் பணித் தோ்வு, வனப் பணித் தோ்வு, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் தோ்வு, மத்திய ஆயுத காவல் படை தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.