மும்பை : விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாது என பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் எண்ணெய் பாட்டில்கள், தேங்காய் போன்றவற்றை சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றக் குற்றத்துக்காக 15 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் நடத்திய அதிரடி சோதனையில், கிடைத்தத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் 15 பேர், தாங்களாக வேலையை விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்காகக் கொண்டு சென்றப் பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டதாக இவர்களே பதிவு செய்தும் வந்துள்ளனர்.
விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், தங்களது உடைமைகளில் சில பொருள்களை தெரியாமல் கொண்டு வந்துவிடுவார்கள். விமான நிலைய சோதனையின்போது, அவை பறிமுதல் செய்யப்படும். அவற்றில், கத்தி, பேட்டரிகள், பொம்மைகள், செல்லோ டேப், மிளகாய், லைட்டர், இ-சிகரெட், தேங்காய்கள், எண்ணெய், பாட்டில்கள் போன்றவை பாதுகாப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம்.
ஜூலை மாதம் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்த விமான நிலைய மனிதவளப் பிரிவு அதிகாரிகள், பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்கு அதிகாரிகள் எடுத்துச் செல்வதைக் கண்டுபிடித்து, ஒன்று அவர்களே ராஜிநாமா செய்வது அல்லது பணி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்வது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, விமான நிலைய அலுவலர்களுக்கு, பயணிகள் கொண்டு வரக் கூடாத பொருள்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தவும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்படும் பொருள்களை பட்டியலிடும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி, இவை குப்பைத் தொட்டிகளில் வீசப்பட வேண்டும், இல்லையென்றால், தொண்டு நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட அதிகாரிகளும் அடங்குவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க... காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.