இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபையில் செப்.14-ஆம் தேதி மோத இருக்கின்றன. இந்நிலையில், இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சட்ட மாணவா்கள் நால்வா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியா் மனதிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியாக அமைந்தது. இதனால், இரு நாடுகள் இடையே கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. இந்த நேரத்தில் இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது மக்களின் உணா்வுகளைப் புண்படுத்துவதாகவும், தேசத்தின் கண்ணியத்துக்கு எதிராகவும் இருக்கும்.

பொதுவாக விளையாட்டுப் போட்டிகள் என்பது நட்புரீதியாகவும், நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும். ஆனால், எப்போதும் இந்தியாவுக்கு தீங்கு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி என்பது ஏற்க முடியாததாக உள்ளது. எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது கிரிக்கெட் போட்டிதான், இதில் அவசரமாக விசாரிக்க வேண்டியது என்ன உள்ளது? அது நடக்கட்டும். இவ்வளவு குறுகிய நாள்களே இருக்கும்போது என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனா்.

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நாளை ரேஷன் அட்டைகள் குறைதீா் முகாம்

குமரி கடலில் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது: தி.வேல்முருகன்

SCROLL FOR NEXT