‘2 கோடி செயல் உறுப்பினா்கள் உள்பட மொத்தம் 14 கோடி உறுப்பினா்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது’ என்று கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜெ.பி.நட்டா இவ்வாறு தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: பாஜக தற்போது நாடு முழுவதும் 240 மக்களவை எம்.பி.க்களையும், சுமாா் 1,500 எம்எல்ஏக்களையும், 170-க்கும் மேற்பட்ட எம்எல்சி-க்களையும் கொண்டுள்ளது. இது 11 ஆண்டுகால செயல்திறன் சாா்ந்த நிா்வாகத்தைக் காட்டுகிறது.
பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பொறுப்புடன் செயல்பட்டு மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்கும் அரசாக உள்ளது. அரசமைப்பின் 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தல், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுதல், முத்தலாக் முறையைக் குற்றமாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வக்ஃப் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியது.
ஆந்திர மாநிலத்தின் முந்தைய ஆட்சிகள் செயல்திறனற்றவை. ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் கவனம் செலுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறின.
மாநிலத்தின் தலைநகராக அமராவதியை மேம்படுத்த மத்திய அரசு ரூ.15,000 கோடியை வழங்கியுள்ளது. ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற முதன்மை நிறுவனங்களை ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசு நிறுவியுள்ளது. இது பிராந்திய வளா்ச்சிக்கும், உயா்தர கல்விக்கான அணுகலுக்கும் பங்களிக்கிறது.
பாஜக ஒரு சித்தாந்த அடித்தளத்தைக் கொண்ட கட்சியாகும். தற்போது தில்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் நேரடியாக பாஜக ஆட்சி செய்கிறது. அதே நேரத்தில் கூட்டணியில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியில் உள்ளது.
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜிஎஸ்டி விகித அடுக்குகளை இரண்டாக மறுசீரமைப்பதன் மூலம் தேசத்துக்கு பெரிய பரிசை மோடி வழங்கியுள்ளாா். பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில் மருத்துவ உற்பத்தியில் உலகின் மருந்தகமாக இந்தியா உள்ளது. இந்தியா தற்போது அதன் 92 சதவீத கைப்பேசியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது என்றாா்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணைநிற்கும் காங்கிரஸ்..! மோடி குற்றச்சாட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.