இந்தியா

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், வரம்பு மீறி மணல் அள்ளி விற்பனை செய்து, அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, பல்வேறு மணல் குவாரி அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு சோதனை நடத்தி, சொத்துகளை முடக்கி வழக்குப் பதிந்தது. மேலும், மணல் குவாரி விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அந்த அழைப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அந்த மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

இதனிடையே, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் சுரங்க விவகாரங்கள் சேர்க்கப்படாத நிலையில், மணல் குவாரி அதிபர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடர்ந்தது சட்டவிரோதம் என்றும், மணல் குவாரிகள் அமலாக்கத் துறையின் விசாரணை வரம்புக்குள் வராது என்றும் கூறி கோவிந்தராஜ் என்பவர் உள்ளிட்ட பல மணல் குவாரி அதிபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 16.07.2024-இல் வழங்கிய தீர்ப்பில், மணல் குவாரிகள் அமலாக்கத் துறை விசாரணை வரம்புக்குள் வராது எனத் தெரிவித்து, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் அமலாக்கத் துறைக்குத் தடை விதித்து, சொத்துகள் முடக்கத்தை நீக்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை 13.09.2024-இல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கர் தாத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதற்கான அவசியம் மற்றும் முகாந்திரம் இந்த வழக்கில் கிடையாது. எனவே, மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், அதேபோல, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் அனைத்தையும் முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அமைதி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஏழுமலையான் தரிசனத்துக்கு 5 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.06 கோடி

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

SCROLL FOR NEXT