சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வு திட்டங்களின் கீழ், தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 24) தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டு வந்த 21 பெண்கள் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் காவல் துறையினர் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடி வந்த 30 நக்சல்களும், இந்தக் குழுவுடன் இணைந்து சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், அதிகப்படியாக 2011 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு, ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பாமன் மத்காம் என்பவர் சரணடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள நக்சல்களுக்கு மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.