மேற்கு வங்கம்: பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!
பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...
மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி இன்று(ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப். 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஏப். 2) தொடங்கி ஏப். 9 வரை நடைபெறுகிறது. ஏப். 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி, சுவேந்து அதிகாரி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
பவானிபூர் தொகுதியில் போட்டியிட சுவேந்து அதிகாரி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மமதா ஏப். 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
சுவேந்து அதிகாரி ஏற்கெனவே நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் மமதா பானர்ஜி கடந்த முறை பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு நந்திகிராமில் தோல்வியைத் தழுவிய நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.