‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!
‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’ என பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதைப் பற்றி...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கடந்தாண்டு இதேநாளில், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதச் சம்பவத்தில் பலியான ஒன்றுமறியாத அப்பாவி உயிர்களை நாம் நினைவுகூர்கிறோம். அவர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
Advertisement
அவர்களின் இழப்பைத் தாங்கிக்கொண்டு, மீண்டு வர முயலும் அவர்களின் குடும்பத்தினருடன் என்னுடைய எண்ணங்கள் துணை நிற்கின்றன.
நாம் அனைவரும் துயரமான சூழலிலும் ஒற்றுமையுடன் நிற்கிறோம். எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் இந்தியா அடிபணியாது. பயங்கரவாதிகளின் கொடூரமான சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி நள்ளிரவில், இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைத் தாக்குதலில், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத்துக்குப் பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழு பொறுப்பேற்ற நிலையில், இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குழுத் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த அதிரடித் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.