பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - கண்ணீருடன் குடும்பத்தினர்!
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயங்கள் கொஞ்சமும் ஆறவில்லை என கண்ணீருடன் கூறுகிறார்கள்.
நாட்டையே உலுக்கிய பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், காயங்கள் ஆறவில்லை என்று, பலியானவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கூறுகிறார்கள்.
தெற்கு காஷ்மீரில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஹெயில்யாங் (30), குடும்பத்தினர் அவரது நினைவாக, அருணாச்சலில் தாஜங் கிராமத்தில் ஒரு நினைவிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
2017ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்த ஹெயில்யாங் (30) கொல்லப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. அவரது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத்தினர், அவரது உருவச் சிலையுடன் நினைவிடம் எழுப்பி அவரது நினைவை பாதுகாக்க திட்டமிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அன்றோடு வாழ்வு உறைந்துபோய்விட்டது என்கிறார் கணவர் ஷுபம் திவேதியை இழந்து தவிக்கும் ஐஷன்யா. இந்துக்களைத் தேடி தேடி, மிக அருகில் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா சிந்தூர் என்ற ஆபரேஷனை நடத்தி எல்லைத் தாண்டி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்தது.
கான்பூரைச் சேர்ந்த ஷுபம் திவேதி - ஐஷன்யா தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. பயங்கரவாதிகளிடம் தன்னையும் சுட்டுக் கொல்லும்படி ஐஷன்யா கெஞ்சியிருக்கிறார். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் முதலில் கொல்லப்பட்ட நபராக ஷுபம் திவேதி உள்ளார்.
கணவரின் பெற்றோருடன் வாழ்ந்துவரும் ஐஷன்யா, எங்கள் வாழ்க்கை அன்றோடு உறைந்துபோய்விட்டது. அவரது நினைவில்லாமல் ஒருநாளும் கழியவில்லை. எங்களுக்கு நிதியுதவி தேவையில்லை. வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலை, இறந்தவர்களுக்கு தியாகி பட்டம் வழங்க வேண்டும் என்பதே. சம்பவத்தின்போது தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் கலைந்துபோய்விட்டன. அந்த சம்பவம் வேண்டுமானால் மற்றவர்களுக்கு நினைவிலிருந்து மறையலாம், ஆனால், அந்த நாளில் இருந்தே அதே வலிதான். காயம் ஆறவேயில்லை என்கிறார் ஐஷன்யா.
மௌனத்தை தேர்வு செய்த நீரஜ் உத்வானி குடும்பம் - ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீரஜ் உத்வானியின் 70 வயது தாய் மௌனமாகவே இருக்கிறார். அவர்தான், பயணத் திட்டத்துக்கு பரிந்துரை செய்தவர். சம்பவம் பற்றி எதுவும் பேசாமல், தங்களது மகனை நினைத்து பிரார்த்தனை மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறார்கள்.
குஜராத் மாநிலம் பாவ் நகரைச் சேர்ந்த யதேஷ் பார்மர் மற்றும் அவரது 16 வயதுமகன் சுமித் ஆகியோர் பயங்கரவாதத்தாக்குதலுக்கு பலியானவர்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பம் இப்போது தனித்தனியாக மாறியிருக்கிறது. தனது ஒட்டுமொத்த வாழ்வும் அன்றைய நாளில் கருகிப் போனதாக யதேஷ் மனைவி கூறுகிறார்.
பாரத் பூஷண் குடும்பத்தினர் பெங்களூரில் வாழ்கிறார்கள். செயற்கையான இயல்பு நிலையில் வாழ்வு நடக்கிறது. பரத்துடன் இணைந்து கிளினிக் தொடங்க திட்டமிட்டிருந்த அவரது மனைவி சுஜாதா தனியாகத் தொடங்கி நடத்தி வருகிறார். மகன் பள்ளிக்குச் செல்கிறார். நாங்கள் உடைந்து அழவில்லை, இயல்பாக இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.