பிகார் மாநிலத்தில், சூனியம் வைத்ததாக 35 வயது பெண் ஒருவர் கிராமவாசிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நவாடா மாவட்டத்தின் ராஜௌலி காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில், முகேஷ் சௌதரி எனும் நபரின் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மூளையில் உருவான கட்டியால் (டியூமர்) அந்தக் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பக்கத்து வீட்டில் வசிக்கும் கிரண் தேவி (வயது 35) எனும் பெண் அவர்களது குழந்தைக்கு சூனியம் வைத்ததாகவும், கிரண் தேவி ஒரு சூனியக்காரி என்றும் முகேஷ் சௌதரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், முகேஷ் சௌதரி உள்பட அவரது குடும்பத்தினர் கிரண் தேவியை இன்று (ஜன. 9) கட்டைகள், இரும்பு கம்பிகள் மற்றும் செங்கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, கிரண் தேவியைக் காப்பாற்ற முயன்ற அவரது சகோதரி மற்றும் உறவினர்களும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த கிரண் தேவி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சர்தார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிரண் தேவி உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயமடைந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கிரண் தேவி மற்றும் முகேஷ் சௌதரியின் குடும்பங்களுக்கு இடையில் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில், அவர் சூனியம் வைத்ததாக வதந்தி பரவியதால் கிரண் தேவி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, காவல் துறையினரின் அறிக்கையில் முகேஷ் சௌதரி, மஹேந்திர சௌதரி, நட்ரு சௌதரி மற்றும் ஷோபா சௌதரி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பிகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் சூனியம் வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், நவாடா மாவட்டத்தில் சூனியம் வைத்ததாகக் கூறி ஒரு தம்பதியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவர் கொல்லப்பட்டார். மேலும், சில மாதங்கள் முன்பு ராஜௌலி பகுதியில் பெண் ஒருவர் சூனியக்காரி எனக் குற்றம்சாட்டப்பட்டு கிராமவாசிகளால் எரித்துக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.