வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளன.
சமீபத்தில் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷரீஃப் உஸ்மான் ஹாதியை கொலை செய்த குற்றவாளி, இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சட்டோகிராமில் உள்ள இந்திய தூதரகம் மீது வங்கதேசத்தினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், அந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்து மதத்தினரைக் குறிவைத்து தொடர் கொலைகள் நடைபெற்று வருகின்றன.
ஹாதியை சுட்டுக் கொன்ற கொலையாளி, தான் வளைகுடா நாட்டில் இருப்பதாக விடியோ வெளியிட்டும், வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன.
வங்கதேச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்களின் தூதரங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளன.
இதனிடையே, அடுத்த மாதம் வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டுக்கான தூதரக பணியை ”நான் ஃபேமிலி போஸ்ட்”டாக (குடும்பத்தை அழைத்துச் செல்லக் கூடாது) இந்திய வெளியுறவுத் துறை மாற்றி அமைத்துள்ளது.
இதனால், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகப் பணியை ”நான் சில்ட்ரன் போஸ்ட்”டாக (குழந்தைகளைக் அழைத்துச் செல்லக் கூடாது) தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தூதரக ஊழியர்கள் அவர்களின் மனைவியை மட்டும் அழைத்துச் செல்லலாம்.
இதன்மூலம் பாகிஸ்தானைவிட வங்கேச தூதரகப் பணியை மத்திய அரசு கூடுதல் அச்சுறுத்தல் மிகுந்ததாக வகைப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.