மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை மாநில அமைச்சரவையில் சேர்க்க மக்கள் விரும்புவதாக மூத்த என்சிபி தலைவரும், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சருமான நர்ஹரி ஜிர்வாள் தெரிவித்தார்.
அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றுடன் இணைந்து ஆளும் மகாயுதி கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது.
சுனேத்ரா பவார் தற்போது மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில் என்சிபியின் எதிர்காலம் குறித்து அமைச்சர் ஜிர்வாள் கூறியதாவது,
மாநில அமைச்சரவையில் அஜீத் பவாரின் மனைவியான சுனேத்ரா பவாரை சேர்க்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதுகுறித்து நாங்கள் தலைமையிடம் பேசி முடிவெடுப்போம் என அஜீத் பவாரின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான ஜிர்வாள், பாராமதியில் அஜீத் பவாரின் இறுதிச் சடங்குக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
என்சிபியின் இரண்டு குழுக்களின் இணைப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜிர்வாள், அந்த இரண்டு பிரிவுகளும் ஏற்கெனவே ஒன்றாகத்தான் உள்ளன.
சிதறி இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றார்.
புணே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் அஜீத் பவார் உள்பட ஐந்து பேர் சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர்.
முன்னதாக, 2023 ஜூலையில் அஜீத் பவார் அப்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.