கலால் வரிக் குறைப்பு - கடைகளில் பேரம் பேசுவது போன்றதுதான்: மமதா விமர்சனம்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, கடைகளில் பேரம் பேசுவது போன்றதுதான் என ஒப்பிட்டு மமதா பானர்ஜி விமர்சனம்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, கடைகளில் பேரம் பேசுவது போன்றதுதான் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், ”இது சேலை கடையில் ஷாப்பிங் செய்வது போலத்தான். நீங்கள் ஒரு சேலையின் விலையைக் கேட்டால், அவர்கள் ரூ. 1,000 என்று கூறுவர். ஆனால், நீங்கள் பேரம் பேசிய பிறகு, ரூ. 400-க்கு ஒப்புக்கொண்டு விடுவர்.
அவர்கள் எரிவாயு விலையை உயர்த்தினர். இப்போது கலால் வரியக் குறைத்தாலும், உண்மையில் விலை எப்படி நிற்கும்?
பொதுமக்கள் யாரும் சிரமப்படக் கூடாது என்பது மட்டுமே என் கவலை. எங்கள் பிராந்தியத்தில் போதுமான எரிவாயு மற்றும் பெட்ரோல் கிடைத்தாலும், காவல்துறை அதிகாரிகள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையில் முழு நிர்வாகத்திலும் மறுசீரமைப்பைத்தான் நான் கோருகிறேன். மேலும், மாநிலத்தில் பெறப்படும் சிலிண்டர்கள் மாநிலத்துக்கு வெளியே அனுப்பக் கூடாது” என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை, வரலாறு காணாத உச்சமாக ஒரு பீப்பாய் 119 டாலரைத் தொட்டு, தற்போது சற்று குறைந்து 100 டாலராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆகவும் மத்திய நிதியமைச்சகம் இன்று குறைத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் விலையேற்ற யோசனையைத் தவிர்க்க அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.