மகளிருக்கு இலவசப் பேருந்து; பதவியேற்ற முதல் நாளிலேயே 3 திட்டங்கள் அறிவிப்பு!
கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்ற முதல் நாளிலேயே அறிவித்த மூன்று முக்கியத் திட்டங்கள் குறித்து...
கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்று முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
கேரளத்தில், வி.டி. சதீசன் முதல்வராக இன்று (மே 18) காலை பதவியேற்றுக் கொண்டார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்த மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதையடுத்து, கேரள மாநில தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் வி.டி. சதீசன் தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். இத்துடன், முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகவும், இந்தக் கூட்டத்தில் கேரள அரசின் தலைமைச் செயலர் ஏ. ஜெயதிலக் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலியே சில முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், அங்கன்வாடிப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதியோர் நலனுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தத் திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட முதல்வர் வி.டி. சதீசன், “ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு சொன்னதைச் செய்துள்ளது. முதல் நாளிலிருந்தே எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.