குரு - சிஷ்யன்

89. வலிமை காண்

ஜி. கௌதம்

அதிகாலை நேரம். குருவும் சிஷ்யனும் நடைபயிற்சியில் இருந்தனர். புத்தம்புது நாளின் பிறப்பை ரசித்தபடியே நடந்துகொண்டிருந்தனர்.

வழியில் ஓரிடத்தில் இளவட்டக்கல் ஒன்றினைக் கண்டார்கள். உருண்டு திரண்டு பார்ப்பதற்கே பிரும்மாண்டமாக இருந்தது அந்தக் கல்.

அதைக் கண்டதும் நின்று நிதானித்தார் குருநாதர். சிஷ்யனும் நிற்க வேண்டியதாயிற்று.

அந்தக் கல்லையே குறுகுறுவென பார்த்தார் குருநாதர். எங்கே தனது குருநாதர் உணர்ச்சிவசப்பட்டு அந்த இளவட்டக்கல்லை தூக்க முயற்சிக்கப்போகிறாரோ என குறும்பாக யோசித்தான் சிஷ்யன். அதே குறும்புடன் குருவின் முகத்தை பார்த்தான்.

அவரோ அந்தக் கல்லையும் சிஷ்யனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார். குருவின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டு துணுக்குற்றான் சிஷ்யன்.

‘‘அய்யோ குருவே.. என்னால் இந்தக் கல்லை தூக்க முடியாது. என் உடல் எடையைவிடவும் இது மிகவும் கனமானதாக இருக்கும்போல் தெரிகிறது..’’ என சத்தம் போட்டுச் சொன்னான். வாய்விட்டுச் சிரித்தார் குருநாதர்.

‘‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உன்னால் முடியும். உன் பலம் என்னவென்று உனக்கே தெரியவில்லை. நீ மனது வைத்தால் இந்தக் கல்லை தலைக்குமேல் தூக்கிவிடலாம்’’ என்று அவனை உசுப்பேற்றினார்.

‘‘இல்லை குருவே. என்னால் முடியவே முடியாது’’ எனக்கூறி, விலகி நின்றான் சிஷ்யன்.

‘‘எங்கே பார்க்கலாமே! முயற்சி செய்துதான் காட்டேன். உன்னால் முடிகிறதா இல்லையா என தெரிந்துகொண்டுவிடலாமே!’’ என்று மறுபடியும் அவனை தூண்டிவிட்டார் குருநாதர்.

வேறு வழியில்லாமல் அரைகுறை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்த இளவட்டக்கல்லின் அருகே சென்றான் சிஷ்யன்.

நின்றான். பெருமூச்சு வாங்கினான். அந்தக் கல்லை பார்க்கப் பார்க்க அவனுக்குப் பதற்றம் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டாரே நம் குருநாதர் எனவும் அவரை மனதுக்குள் கடிந்துகொண்டான்.

ஆனால் குரு பிடிவாதமாக இருந்தார். ‘‘என்ன யோசிக்கிறாய்? ம்ம்ம்.. மூச்சைப் பிடித்து நிறுத்திக்கொண்டு கல்லை தூக்கிக் காட்டு..’’ என்று கூறினார்.

இப்போது அவரது குரலில் கண்டிப்பும் கூடியிருந்தது. குருவின் கட்டளைக்கு பொறுப்பான சிஷ்யன் கீழ்ப்படிந்துதானே ஆக வேண்டும். கல்லைத் தூக்கத் தயாரானான் அவன்.

அவனது கை விரல்கள் பட்டதும் அப்படியும் இப்படியுமாக அசைந்தது அந்த இளவட்டக் கல். அது அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது.

உடல் வலு முழுவதையும் கைகளுக்குக் கொண்டுவந்து அந்தக் கல்லை இறுகப் பற்றிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தரையிலிருந்து தூக்கத் தொடங்கினான்.

‘‘அருமை! அப்படித்தான்.. விடாதே.. தலைக்குமேல் தூக்கிப்பிடி..’’ என்று குழந்தையின் குதூகலத்துடன் அவனை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார் குருநாதர்.

அவர் கொடுத்த உற்சாகம் அவனது தெம்பைக் கூட்டியது. தரையிலிருந்து உயர்த்திய கல்லை வயிற்றோடு இறுக்கிப்பிடித்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மேலே உருட்டி கழுத்துவரை கொண்டுவந்து அதன் அடியில் இரண்டு கைகளையும் தாங்கிப் பிடித்து தலைக்கு மேல் தூக்கிக் காட்டிவிட்டான்.

உயர்த்திய கைகளில் ஓரிரு விநாடிகள் அந்தக் கல்லை அப்படியே தாங்கிப்பிடித்து நிறுத்தினான். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என உணர்ந்துகொண்டு ‘தொப்’பென கல்லை கீழே போட்டான்.

இரண்டு கைகளையும் தட்டி கரவொலி எழுப்பி அவனைப் பாராட்டி மகிழ்ந்தார் குருநாதர். எப்படி இவ்வளவு கனமான கல்லை தன்னால் தூக்கிப் பிடிக்க முடிந்தது என ஆச்சரியப்பட்டான் சிஷ்யன்.

‘‘உன்னால் இதைச் செய்யமுடியாது என்று சொன்னாயே.. இப்போது பார்த்தாயா! நான் எதிர்பார்த்ததைவிடவும் இலகுவாக இந்தக் காரியத்தை செய்து முடித்திருக்கிறாய் இப்போது..’’ என்றார்.

‘‘ஆமாம் குருவே. இதை நானும் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை‌. எத்தனையோ நாட்கள் இந்தப் பாதையை கடந்திருக்கிறேன். இந்தக் கல்லை ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இதனை என்னால் இப்படி தூக்கிப் பிடிக்க முடியும் என்று நினைத்ததே கிடையாது..’’ என்று கூறி தோள்களை உயர்த்திக்கொண்டான் சிஷ்யன்.

அவனைத் தட்டிக்கொடுத்தார் குருநாதர்.

‘‘கடினமான இந்தக் கல்லை தூக்கும் உடல் வலிமையும், தூக்கமுடியும் என நம்பும் மனவலிமையும் உனக்குள் இருக்கிறது. ஆனால் நீதான் அதை நம்பாமல் இத்தனை நாள்களாக பயந்துகொண்டு இருந்திருக்கிறாய்..’’ என்றார்.

‘‘ஆமாம் குருவே. இப்போது அந்த பயம் என்னைவிட்டுப் போய்விட்டது. இனி எத்தனை முறை இந்தக் கல்லை தூக்கிப்பிடிக்கச் சொன்னாலும் என்னால் செய்துகாட்ட முடியும்..’’ என்று குஷியுடன் பதில் சொன்னான் சிஷ்யன்.

குருவும் சிஷ்யனும் நடைப்பயிற்சியை தொடர்ந்தார்கள்.

‘‘"நீ செய்துகாட்டிய இந்த செயலில் எவ்வளவு பெரிய வாழ்க்கை தத்துவம் அடங்கி இருக்கிறது தெரியுமா!’’ என்று சிஷ்யனை பார்த்தபடியே சொன்னார் குருநாதர்.

‘‘என் செயலிலா.. வாழ்க்கை தத்துவமா! யூகிக்க முடியவில்லை குருவே!’’ என்றான் சிஷ்யன்.

‘‘கடினமான ஒரு வேலையை செய்து முடித்த பிறகுதான் அதனை செய்து முடிக்கத் தேவையான வலிமை ஏற்கெனவே நம்மிடம் இருந்திருக்கிறது என்ற உண்மை நமக்குத் தெரியவரும். சவால்களையும் கஷ்டங்களையும் சந்தித்துக் கடந்தபிறகுதான் நமக்குள் இருக்கும் மனவலிமையும் உடல்வலிமையும் நமக்கே புரியும். சிக்கல்கள் ஏதுமில்லாத வாழ்க்கை அமையுமானால் நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும். அதனால்தான் சொல்கிறேன்.. சவால்களையும் துயரங்களையும் சந்திக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். அவைதான் நம் ஆற்றலை நமக்கு புரியவைக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிகள்..’’ என்றார் குரு.

எந்தச் செயலில் இருந்தும் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக்கொடுக்கும் தன் குருநாதரின் சாதுர்யத்தை எண்ணி வியப்பு கொண்டான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT