நெல்லை அருகே அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ் மோதல்: மாணவி பலி: 60-க்கும் மேற்பட்டோர் காயம்
திருநெல்வேலி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு அரசு பஸ் வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டது. இந்த பஸ்ஸை சமாதானபுரத்தைச் சேர்ந்த ராமசந்திரன் மகன் விஜயகுமார் (55)
திருநெல்வேலி அருகே அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி இறந்தார். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு அரசு பஸ் வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டது. இந்த பஸ்ஸை சமாதானபுரத்தைச் சேர்ந்த ராமசந்திரன் மகன் விஜயகுமார் (55) ஓட்டினார். இதேபோல சிரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்த பஸ்ஸை கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த குருசாமி மகன் குருசாமி (57) ஓட்டி வந்தாராம்.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் இருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்த ஆம்புலன்ஸும், திருநெல்வேலியில் இருந்து சொக்கம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநராக ஆனந்தகுமாரும், உதவியாளராக ராஜ்குமாரும் இருந்தனர்.
திருநெல்வேலி-சங்கரன்கோவில் பிரதான சாலையில் ராமையன்பட்டியை கடந்து சேதுராயன்புதூர் செல்லும் பகுதியில் போலீஸ் காலனி அருகே சென்றபோது இருஅரசு பஸ்களும், ஆம்புலன்ஸும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்ததும் மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே மானூர் அருகே உள்ள கீழபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த செல்வம் மகள் கிருஷ்ணவேணி என்ற மீனா (22) இறந்தார். இவர், திருநெல்வேலி சாராள்டக்கர் கல்லூரியில் எம்.எஸ்சி படித்து வந்தார்.
இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம்: குளச்சலைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மகள் டோல்வி (17), பள்ளமடையைச் சேர்ந்த காஞ்சாவனம் மகன் மாலையப்பன் (30), அழகியபாண்டியபுரம் அருள்தாஸ் மனைவி ஞானம்மாள் (30), அய்யனார்ஊத்து சந்தனத்தேவர் மனைவி சண்முகத்தாய் (50), மானூர் இப்ராஹிம் மனைவி மைதீன்பீவி (68), திருநெல்வேலி நகரம் பாறையடியைச் சேர்ந்த உய்க்காட்டான் மகள் அபிராமி (19), வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த லட்சுமணபாண்டியன் மகன் முருகன் (35), மாரிச்சாமி, முப்புடாதி, நாகராஜன், புஷ்பராஜ், ராஜ்குமார், முத்தமிழ்ச்செல்வி, சீதாலட்சுமி, அமுதா, அனுஈகா, துரைச்சி, கோபாலகிருஷ்ணன், கோகிலா, மகாலட்சுமி, சுகந்தி, வீரபெருமாள் உள்பட 26 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று சென்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்திற்கு திருநெல்வேலி கோட்டாட்சியர் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.