சிறப்புச் செய்திகள்

சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் ‘கார்டியோலஜிஸ்ட் நண்பன்’-‘அர்ச்சுனன் மரம்’! 

மரு.சோ.தில்லைவாணன்

உலக அளவில் அதிக பாதிப்பை உண்டாக்கும் தொற்றா நோய்கள் வரிசையில் முதலில் நிற்பது ‘நீரிழிவு’ எனும் ‘சர்க்கரை வியாதி’ தான். உலக அளவில் அதிக இறப்பு விகிதத்திற்கு காரணமும் அதே நீரிழிவு நோய் தான். அப்படி சர்க்கரை நோய் வந்த பிறகு நம் உடலுக்கு என்ன தான் ஆகிறது? ஏன் அதிக இறப்புக்கு காரணமாகிறது என்பது பலருக்கும் விடை தெரியாத வினா. அந்த வினாவிற்கான விடை முடிச்சியை அவிழ்த்து இந்த கட்டுரையில் விடை காண்போம்.

இரத்தத்தில் வழக்கத்திற்கு மாறாக சர்க்கரை அளவு அதிகரிக்கும் நோய் நிலையை ‘நீரிழிவு’, ‘மதுமேகம்’ என்றெல்லாம் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது. இந்த நீரிழிவு நோய் கட்டுப்படாமல் உள்ள நிலையில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் என்று நவீன மருத்துவம் மட்டுமல்ல, சித்த மருத்துவமும். ‘நீரிழிவு நோயின் அவத்தைகள்’ என்ற பெயரில் எடுத்துரைக்கிறது. 

நீரிழிவு அவத்தைகளில் இராச உறுப்புகளாக கருதப்படும் இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவை சார்ந்த குறிகுணங்களை உண்டாக்கும். அதில் முக்கியமாக உடலில் உயிர் துடிப்பு, நாடிதுடிப்புக்கு காரணமான இதயம் பாதிக்கப்படுவது தான், சர்க்கரை நோயில் அதிக இறப்புகள் உண்டாகக் காரணம்.

நீரிழிவு நோயில் ஏற்படும் இதய நோய்க்கு மிக முக்கிய காரணம் ‘அத்தீரோஸ்கிளிரோசிஸ்’ எனும் ரத்த குழாய்களில் அதிக கொழுப்பு படியும் நிலை. இவ்வாறாக இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரண்டு கரோனரி இரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு தான் மாரடைப்புக்கு வழி கோலுகிறது. 

இன்றைய நவீன வாழ்வியல் முறைகளால், துரித உணவு வகைகளால் மாரடைப்பு என்ற சொல் நமக்கு பழகி போன ஒன்றாகிவிட்டது. வயது மூப்பில், நீரிழிவு நோயில் மாரடைப்பு என்ற நிலை இல்லாமல் எல்லா வயதினரையும் பாதித்து சட்டென இறப்பினை உண்டாக்கிவிடும் அவல சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளை மாற்றி, பாரம்பரிய உணவு முறைகளை என்று சிதைத்தோமோ, அன்றைய நாளே ஆரோக்கியத்தை இழந்து விட்டு, இன்று மருத்துவமனைகளில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

நவீன வாழ்வியல் என்று கை காட்டி, பாரம்பரிய உணவு முறைகளை பழக்கவழக்கங்களை மறந்ததோடு, உடல் உழைப்பையும் மறந்துவிட்டதும் நோய்களுக்கு காரணம். அத்தகைய நவீன வாழ்வியல் எனும் விதைகளின் விளைச்சல் தான் தொற்றா நோய்கள். அத்தகைய நோய்நிலைகளைத் தான் இன்று அறுவடை செய்துகொண்டு அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நீரிழிவு நோயும், அதனால் உண்டாகும் இதய நோய்களும் முக்கிய இடத்தை பிடித்து ஆயுளைக் குறைக்கும் நண்பர்கள்.

இந்த நிலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, இதயத்தின் நலம் காக்கும் ஒற்றை மருந்து உண்டு என்றால், அது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது மட்டுமல்ல, ஆரோக்கியம் எனும் மாமரத்தை முழுவதும் பறிப்பதற்கு சமம். அந்த ஆரோக்கிய மரத்தை பறிக்க உதவும் சித்த மருத்துவ மூலிகை தான் ‘அர்ச்சுனன் மரம்’ எனும்மருத மரம்’. 

அர்ச்சுனன் மரம் என்ற மருத மரத்தின் பெயரை சற்றே ஆராய்ந்தால் நமக்கு நிச்சயம் வியப்பளிக்கும். பல சிவன் கோவில்களில் தல விருட்சமாக மருதமரம் நம் முன்னோர்களால் வணங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மருத்துவ தன்மையும், இறைத் தன்மையும் ஒருங்கே பெற்று இருக்கின்றபடியால் இதனை இறைவனாக எண்ணி 'அர்ச்சுனன் மரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

துவர்ப்பு சுவையுடைய மருத மரத்தின் பட்டை பல ஆயிரம் ஆண்டுகளாய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. “ஓதமேனும் நீரிழிவை ஓட்டும்” மருதம்பட்டை என்கிறது சித்த மருத்துவ புதையல் நூலான அகத்தியர் குணவாகடம்.

மருதம் பட்டையில் உள்ள அர்ச்சுனின், அர்ச்சுனிக் அமிலம், அர்சுனோலிக் அமிலம், அர்ச்சுஜெனின், டெர்மினிக் அமிலம் போன்ற முக்கிய டெர்பீனோய்டுகள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளன. அதில் உள்ள அர்ச்சுனோசைட் I மற்றும் II, அர்ச்சுனேட்டின் ஆகிய இதய கிளைகோசைடுகள் அதன் இதயத்தை காக்கும் தன்மைக்கு காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி பட்டை மற்றும் இலையில் மருத்துவ குணமிக்க டானின்கள், சப்போனின்கள், பிளவனாய்டுகள், பீனோலிக் வேதிப்பொருள்கள் ஆகியவையும் உள்ளது.

மருதம்பட்டையானது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், வீக்கங்களை குறைப்பதாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், ரத்த குழாய் அடைப்பினை தடுப்பதாகவும், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை பாதுகாப்பதாகவும் உள்ளது. நாள்பட்ட கல்லீரல் நோயால் அவதிப்பட்டு நோயின் விளிம்பில் உள்ளவர்கள் மருதப்பட்டையை நாடினால் நல்ல பலன் தரும்.

சிறப்பாக மருதம் பட்டையானது இதயத்தை காக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. கரோனரி ரத்த குழாய் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இஸ்கிமிக் கார்டியோமயோபதி ஆகியவற்றுக்கு பயனுள்ளதாக இருப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

மேலும், மருதப்பட்டை இதயச் சுருக்கத்தின் சக்தியை அதிகரிப்பதாகவும்,  உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் உள்ளது. மேலும், இதய தசையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பு. இதய செயலிழப்பு, கரோனரி ரத்த குழாய் பாதிப்பு, மாரடைப்பு நெக்ரோசிஸ் ஆகியவற்றிற்கான பிந்தைய சிகிச்சை முறையில் நல்ல பலன் தருவதாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காக சிறப்பாக சொல்லப்பட்டுள்ள ‘ஆவாரை குடிநீர்’ என்ற சித்த மருந்திலும் மருதம்பட்டை சேருவது குறிப்பிடத்தக்கது. நீரிழிவில் இதய பாதிப்பை உணர்ந்து நம் முன்னோர்கள் திட்டமிட்டு ஆவாரை குடிநீரில் மருந்து சரக்குகளை முறைப்படுத்தியது வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆவாரை குடிநீரை எடுத்துக்கொள்வதும் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து இதயத்திற்கு நலம் பயக்கும். அல்லது தனி மருதப்பட்டை சூரணத்தை எடுத்துக்கொள்வதும் மேற்கூறிய நன்மைகளை அளிக்கும்.

ஆக, தொற்றா நோயின் அரசனாகிய நீரிழிவு நோயை எண்ணி இனியும் வருந்தாமல், அந்நோய்க்கு இதயத்தை பறிகொடுக்காமல், ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் அர்ச்சுனனை நாடினால் ஆயுள்காலம் நிச்சயம் கூடும். இது பாரம்பரிய முறையில் இதய நலன் காக்கும் ‘கார்டியோலஜிஸ்ட் நண்பன்’. 
 
மருத்துவரின் ஆலோசனைக்கு: இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT