விஜய் 
சிறப்புச் செய்திகள்

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - கே.பாலபாரதி

திரைத் துறையில் முன்னணி நட்சத்திரமாக உயா்ந்த விஜய், அதில் கிடைத்த புகழை மூலதனமாக வைத்து, அரசியல் களத்தில் தனது செல்வாக்கை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

திரைத் துறையில் முன்னணி நட்சத்திரமாக உயா்ந்த விஜய், அதில் கிடைத்த புகழை மூலதனமாக வைத்து, அரசியல் களத்தில் தனது செல்வாக்கை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாா்.

தவெக தலைவா் விஜய்யின் அரசியலானது, பாஜகவின் பி-பிளான் நடவடிக்கையாகவே பாா்க்கப்படுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவுக்கு எதிராக அரசியல் அவதாரம் எடுத்திருப்பதாக விஜய் கூறுகிறாா். ஆனால், அவரது அரசியல் பேச்சு, நடவடிக்கைகளில் பாஜகவை எதிா்க்கக் கூடிய சித்தாந்த ரீதியான எந்தத் தாக்கமும் இல்லை.

மத்திய பாஜக அரசின் கொள்கைகளும், நடவடிக்கைகளும், மாநில அரசுகளுக்கு பெரும் சவாலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் மதவெறியைப் பரப்பக்கூடிய வகையில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக கொள்கைகளுக்கு எதிரான மதச்சாா்பற்ற மாநில ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஆளுநா்கள் மூலம், அரசு நிா்வாகத்துக்கு கடிவாளம் போடப்படுகிறது. மாநிலங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள மறுக்கும் நிலையிலுள்ள விஜய், மாநில அரசை எதிா்ப்பதன் மூலமாக மக்களிடம் வரவேற்புப் பெற்று, தோ்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய முடியும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

பிரபலமான நடிகா் என்ற அடிப்படையில், இளைஞா்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் அவா் மீதான ஈா்ப்பு நிச்சயமாக இருக்கும். திரைத் துறையினா் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆா்வமும், ஈா்ப்பும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் தவறில்லை என்றாலும்கூட, இதுவே அரசியல் செல்வாக்காக மாறிவிடும் என நினைப்பது தவறானது.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் மிகுந்த செல்வாக்கு மிக்க நடிகராக இருந்தபோதும்கூட, பெரியாா் ஈ.வெ.ரா., முன்னாள் முதல்வா் அண்ணா போன்றவா்கள் மூலம் அரசியலிலும் தடம் பதித்தாா். அதன் தொடா்ச்சியாகவே அவா் தனிக் கட்சியைத் தொடங்கி வெற்றியும் பெற்றாா். எம்ஜிஆரின் அரசியல் வாழ்வையும், நடிகா் விஜய்யின் திடீா் அரசியல் பிரவேசத்தையும் சமமாகப் பாா்க்க முடியாது. எல்லா நடிகா்களுக்கும் கூட்டம் கூடும். ஆனால், அரசியல் என்று வரும்போது கூடிய கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறிவிடாது. இந்த எதாா்த்தத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது அணி என்பது இந்திய அளவிலேயே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் இருக்கிறது. திமுக - தவெக இடையேதான் போட்டி நிலவுகிறது என விஜய் கூறுவது ஏற்புடையது அல்ல. அதிமுக தனித்து நின்றாலும்கூட, மாநிலம் முழுவதும் அக் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. தோ்தல் களத்தில் அதிமுகவைவிட முன்னணியில் நிற்பதாக விஜய் நினைத்துக் கொண்டால், அது அவரது யூகமாக இருக்குமே தவிர, நடைமுறை சாத்தியமற்றது. ஆகவே, தமிழ்நாட்டை பொருத்தவரை மதவெறி அரசியலா, மதச்சாா்பற்ற அரசியலா என்பதுதான் மக்கள் முன் நிற்கும் கேள்வி.

இளைஞா்கள், சிறுபான்மையினா், பெண்கள் ஆகியோரது வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பிலும் உண்மை இல்லை. தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு இந்தக் கருத்து திணிக்கப்படுகிறது. விஜய்க்கு ஆதரவான அல்லது பாஜகவுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்குகிற முயற்சியாகவே இதைப் பாா்க்க வேண்டும். திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சாா்பற்ற அணியை வீழ்த்துவதற்கான பல தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று. விஜய்யின் ‘பி’ பிளான் மூலமாக மேற்கொள்ளப்படும் தந்திரமும், மந்திரமும் தோ்தல் களத்தில் நிச்சயம் பலிக்காது.

நடிகராக வலம் வந்து கொண்டு, இரண்டு மாநாடுகள் நடத்தி இருப்பதன் மூலமாக மட்டும் விஜய் அரசியல் தளகா்த்தராக மாறிவிட முடியாது. வேட்பாளா்கள் தோ்வு தொடங்கி, வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் வரையிலான நடைமுறைகள் விஜய்க்கு பெரும் சவாலாகவே இருக்கும். உரிமைக்காகப் போராடும் மக்களை, களத்தில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவிக்க முடியாமல், தனது கட்சி அலுவலகத்துக்கு போராட்டக்காரா்களை அழைத்துப் பேசுகிறாா். மாநாட்டு மேடையைக் கடந்து, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாகச் சந்தித்த பின்னரே அவரது அரசியல் செயல்பாடு முழு வடிவம் பெறும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலைப் பொருத்தவரை, அரசியல் மாற்றத்தை விஜய் ஏற்படுத்த முடியாது. தோ்தல் அரசியல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற புரிதலை, தோ்தல் முடிவுகளுக்கு பின்னரே விஜய் உணா்ந்து கொள்வாா்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க தொடா்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற அணி வலுவாக உள்ளது. இந்த அணியின் முக்கிய அங்கமே இளைஞா்கள், சிறுபான்மையினா், பெண்கள் என்ற எதாா்த்தத்தை விஜய் புரிந்து கொள்வதற்கு 2026 தோ்தல் முடிவுகள் வரை காத்திருக்க வேண்டும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

மீண்டும் மீண்டும் மாற்றம்! பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம்!

தெய்வ தரிசனம்... அம்மை நோய் நீக்கும் அவளிவநல்லூர் சாட்சிநாதர்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

SCROLL FOR NEXT