விஜய் அன்றும் இன்றும்... சித்திரிப்பு / முத்துராஜா
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... விஜய்யின் அரசியல் களமும் சினிமா கால்ஷீட்டும்!

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி...

எம். பாண்டியராஜன்

நல்லதோ, கெட்டதோ, கிட்டத்தட்ட தனித்தே தேர்தலில் களம் காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.

அதிமுகவிலிருந்து வெளியேறிவந்து இணைந்த கே.ஏ. செங்கோட்டையனைத் தவிர, கட்சியில் அரசியல் முகங்கள் மிக மிகக் குறைவு. வருவார்கள், வருகிறார்கள் என்று அவர் சொன்னவர்கள்கூட யாரும் இன்னமும் வரவில்லை. பிற கூட்டணிகளில், கட்சிகளில் தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்த பிறகு அங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது நிராகரிக்கப்பட்டவர்கள் வேண்டுமானால் வந்து சேரும் வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கின்றன.

த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதைப் போன்ற சித்திரத்தை எழுப்பி, திமுகவிடம் கூடுதல் பங்கைப் பெற - தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களும் கொஞ்சம் அடக்கிவாசிக்கத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் அனேகமாக திமுகவுடன்தான் கூட்டணி, மாற்றம் இருக்குமெனத் தோன்றவில்லை.

பெரும்பாலும் கட்சிகள் அணிசேர்ந்துவிட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்தின்  தேமுதிக, ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற சில கட்சிகள்தான் மிச்சமிருக்கின்றன. இவர்கள் யாருடன் இணைந்து நிற்பார்கள் என இதுவரையிலும் உறுதிப்படவில்லை.

‘முப்பது சதவிகித வாக்குகளைப் பெறுவோம்; தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கும் திறன் இருக்கிறது’ என்று த.வெ.க.வின் கொள்கை பரப்புச் செயலரான அருண்ராஜ் தெரிவித்திருக்கிறார். ‘விஜய் முதல்வராவது உறுதி’ என்கிறார் பொதுச்செயலரான புஸ்ஸி ஆனந்த்.

பாசிட்டிவ் தாட் - நல்ல நம்பிக்கை!

ஆனால், இவர்களின் கட்சித் தலைவர் விஜய் எப்போது நடிகர் என்ற தோற்றத்திலிருந்தும் நாயக மனநிலையிலிருந்தும் விடுபட்டு அரசியல் தலைவராகப் போகிறார் என்பதுதான் தெளிவுற மறுக்கிறது.

2024 பிப். 2 தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார் விஜய். கட்சி தொடங்கிய பின், எத்தனை முறை மக்களைச் சந்தித்திருக்கிறார், என்றுகூடச் சொல்ல முடியாது, எத்தனை முறை மக்கள் முன் தோன்றியிருக்கிறார்?

2024 பிப். 2 - கட்சியின் தொடக்க விழா, ஜூன் 28 - 10, 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா, ஆக. 22 – கொடி, பாடல் அறிமுகம், நவ. 30 - அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா, டிச. 4 - பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல், 2025 ஜன. 29 - தவெக மாவட்டச் செயலர்கள் கூட்டம், பிப். 2 - கட்சியின் இரண்டாமாண்டு தொடக்க விழா, பிப். 26 - திமுக, பாஜகவுக்கு எதிரான கெட்அவுட் இயக்கம், மே 30, ஜூன் 4, 15 - மாமல்லபுரத்தில் 10, 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு, அக். 27 – கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல், 2026 பிப். 2 - மூன்றாமாண்டுத் தொடக்க விழா – ஆக, 13, 14 நிகழ்ச்சிகள். இவையெல்லாமும் கட்சி அலுவலகத்தில் அல்லது ஏதோ அரங்கில்தான் நடைபெற்றன, லிமிடெட் ஆடியன்ஸ்.

பொதுமக்கள் திரள் முன் எப்போது வந்தார்?

2024 அக். 27 - விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாடு, 2025 ஜன. 20 -  பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு விசிட், ஏப். 26, 27 – கோவையில் சாலை வலம், பூத் கமிட்டி மாநாடு, மே 21 – ஜன நாயகன் படப்பிடிப்புக்கு கொடைக்கானல் செல்லும் முன் மதுரையில் கேரவன் பேரணி, ஜூலை 13 - அஜித் குமார்  கொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம், ஆக. 21 - மதுரையில் மாநில மாநாடு, செப். 13 - திருச்சி சாலை வலம், செப். 20 - நாகை, திருவாரூர் சாலை வலம், செப். 27 நாமக்கல், கரூர் சாலை வலம், கரூரில் 41 பேர் பலியைத் தொடர்ந்து, பெரிய இடைவெளி, பிறகு நவ. 23 – காஞ்சி சுங்குவார்சத்திரம், டிச. 11 புதுச்சேரி, டிச. 18 ஈரோடு கூட்டங்கள். – ஆக மொத்தம், 12 நிகழ்ச்சிகள்! ஒருவேளை சில விடுபட்டிருக்கலாம்.

 இவைதவிர, 2024 ஏப். 19 - மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, செப். 18 - பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த, 2025 ஜூலை 2 - திருப்புவனத்தில் காவல் துறையால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மின்னலாக வெளியே வந்து சென்றிருக்கிறார் விஜய். (தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்காக அவர் பேட்டியளித்ததெல்லாம் தனிக் கதைகளில் வரும்).

திரைப்பட பாணியிலேயே சொல்ல முனைந்தால், 8 மணி நேர கால்ஷீட் என்று வைத்துக் கொள்ளும்பட்சத்தில், கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை கட்சிக்காக அவர் ஏறத்தாழ 25-லிருந்து 30 கால்ஷீட்கள் வரை நேரம் ஒதுக்கியிருக்கிறார்!

நடத்திய சில போராட்டங்களிலும், ஷூட்டிங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்த நிலையில், திரைப்படங்களில் கேமியோ மாதிரி, கெஸ்ட் ரோல் மாதிரி தோற்றம் காட்டியிருக்கிறார். மக்களோடு மக்களாக நேரடியாகக் களத்தில் கலந்து நிற்பது என்பது இவரால் இயலவும் இயலாது என்கிற நிலை.

கட்சி தொடங்கி இரு ஆண்டுகளான பிறகும் ஒட்டுமொத்த கட்சியினரும் இன்னமும்கூட நடிகர் விஜய்யின் ரசிக மனநிலையிலிருந்து விடுபடாமல் ஆழ்ந்துகிடக்கின்றனர். விஜய்யுமே அவருடைய பிம்பச் சிறையிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, ரசிகர்களுடன் கலந்துறவாடி, அவர்களை ரசிகர்களிலிருந்து  தொண்டர்களாக மாற்ற, தானும் நாயக நடிகர் என்பதிலிருந்து அரசியல் தலைவர் என்று மாற ஏதேனும் முயற்சி செய்தாரா, செய்கிறாரா? எதுவும் அவர்கள் செயல்பாடுகளில் தெரியவில்லை.

இப்போதும் ரசிகர்களிடமிருந்து அதாவது தொண்டர்களிடமிருந்து தொலைவிலேயேதான் நடிகரைப் போலவே காட்சிப்படுத்தப்படுகிறார் விஜய், அரசியல் தலைவர்களைப் போல அல்ல. நிறைய தடைகள், எண்ணெய் தடவிய தடுப்புக் குழாய்கள். சுற்றிலும் யாரும் அண்டிவிடக் கூடாதென்பதற்காக சீருடையணிந்த நிறைய பௌண்சர்கள்!

க், ச்... தான். என்றாலும் யோசிக்கலாம். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக முடியாதபட்சத்தில், எம்எல்ஏவாகிவிட்ட கட்சித் தலைவர் விஜய்யை யாராலும் சந்திக்க முடியுமா? ஒரு மனுக் கொடுக்க முடியுமா? மக்கள் பிரச்சினைக்காக ஏதாவது பரிந்துரைக்குக் கையெழுத்துப் பெற முடியுமா? என்ன செய்ய முடியும்?

பிம்பமும் ரசிக மனநிலையும் தொடருவதென்பது ஒருக்காலும் அரசியலுக்கு சரிப்பட்டு வந்ததில்லை என்பது ஏற்கெனவே நம் நாட்டில் பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

த.வெ.க. கட்சித் தலைவரும் தொண்டர்களும் (ஸ்டாரும் ரசிகர்களும்?) 41 பேர் பலி கொடுக்கப்பட்ட கரூர் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய பாடத்தைக் கற்றிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் அதே பாணியில்தான் கூட்டங்களாகத்  திரள்கிறார்கள்; நடந்துகொள்கிறார்கள். பார்க்கவே, அச்சமாக இருக்கிறது. த.வெ.க. அலுவலகத்தில் விருப்ப மனு வாங்க வந்த கூட்டத்தைப் பார்த்துப் பனையூர்ப் பகுதி மக்கள் வெருண்டு போய்விட்டிருக்கிறார்கள் போல.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மொத்தம் 234 தொகுதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்குச்சாவடிகள்? மக்கள்தொகையைப் பொருத்து 250 முதல் 350 வரை இருக்கலாம். தமிழ்நாட்டில் மொத்தம் 88 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் இருக்கின்றன (புதிய எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்குப் பிறகு கொஞ்சம் முன்பின்னாக இருக்கலாம்). ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் எத்தனை முகவர்கள் தேவைப்படுகிறார்கள்? வாசல்களில் எத்தனை பேர் இருப்பார்கள்? பெரும்பகுதி ரசிகர்களான இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களை எல்லாம் யார் ஒருங்கிணைப்பார்கள்? செல்வாக்கு மிக்க அரசியல் கட்சிகள் எதுவும் அணியில் சேராதபட்சத்தில் திணறிப் போய்விடுவார்கள்! (மறைந்த முதல்வர் எம்ஜிஆருடனும் அவர் தொடங்கிய காலத்து அதிமுகவுடனும் ஒருக்காலும் ஒப்பிடவே கூடாது; முடியவும் முடியாது – ஆனால், விஜய் முயற்சி செய்கிறார் –   இதுபற்றி மட்டுமே தனியே மிக விரிவாக எழுதலாம்). ஏனென்றால், திமுக, அதிமுக தவிர அனைத்துக் கட்சிகளுக்குமே இது மிகப் பெரிய பிரச்சினை, இன்றைய காங்கிரஸ் உள்பட!

புலி படத்துக்குப் பெற்ற ரூ. 15 கோடி வருவாயைக் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. உரிய காலத்தில் சொல்லவில்லை; அபராதம் விதிக்கலாமா, வேண்டாமா என்பது பற்றிதான் நீதிமன்றத்தில் வழக்கே  தவிர, கணக்கில் காட்டாததைப் பற்றியல்ல. அபராதம் விதித்தது செல்லும் எனத் திடீரென வெளிவந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பால் – அரசியல் மேடைகளில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் ஊழல் ஒழிப்புப் பேச்சுகளை பிற கட்சியினர் கழுவி ஊற்றுகின்றனர் (ரசிகர் மன்றத்துக்கு ரூ. 2 கோடி செலவிட்டதாகக் கூற,  அதற்கெல்லாம் ஆதாரமில்லை என்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது!).

கடந்த ஆண்டாவது மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி விஜய் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த முறை இதுவரையிலும் ஒரு சப்தமும் இல்லை. கட்சித்  தலைவராகிவிட்ட ஒருவருக்கு மத்தியில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், நோ ரியாக்.ஷன். என்ன காரணமாக இருக்கும்?

கட்சியின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவில்கூட ‘அரசியல் எதிரி’ திமுகவைத்தான் கடுமையாக விமர்சனம் செய்தாரே ஒழிய, ‘கொள்கை எதிரி’ பாரதிய ஜனதா கட்சியையோ, மத்திய அரசையோ அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. நிச்சயம் கரூர்ப் பலி தொடர்பான மத்திய புலனாய்வுக் குழு நடத்தும் விசாரணை போன்றவை காரணமாக இருக்காது என்று நம்பலாம்.

சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் சுற்று நாட்டியப் போட்டியென்றால் ஒருவேளை பனையூரில் ஆடிய நடனத்தின் மூலம் விஜய் முன்னணியில் இருப்பதாகக் கூறலாம். ஏனெனில், வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் இந்தச் சுற்றுப் போட்டிக்கு வர மாட்டார்கள். நினைத்துப் பார்க்கவும் முடியாது.

வருங்காலத் தமிழ்நாட்டுக்காக அர்ப்பணிப்பு கொண்டிருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால், என்னவோ பிடிக்கப் போய் என்னவோ ஆன கதையைப் போல போய்க் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல் நிலைமை. கூட்டணிக்கு வரக் கட்சி எதுவும் இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறார் விஜய்? ரசிகர் மன்றத்தினரே கட்சியையும் தேர்தலையும் எதிர்கொண்டுவிடுவார்களா?

ஆனால், யாராலும் மறுக்க முடியாத, மிகவும் வெளிப்படையான உண்மை ஒன்றிருக்கிறது. நடிகரோ, கட்சித் தலைவரோ, விஜய்க்கு இருக்கிற ஆதரவு. எத்தனை சதவிகிதம் என்பதில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்படும் பட்டிமன்றங்கள் நடந்தாலும், அமைப்பாகத் திரட்ட முடியாமல் போனாலும், அதுவாக தானாகத் திரளக் கூடிய (கூட்டம் போலவே) ஆதரவு வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகள் எல்லாம் எப்படி விழப் போகின்றன? எத்தகைய வினையாற்றப் போகின்றன? என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன? இவற்றால் யார் பயனுறப் போகிறார்கள்? யார் பாதிக்கப்படப் போகிறார்கள்? பேரவைத் தேர்தல் முடிவில் இவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? எல்லாமே கில்லி அல்ல கிலிதான்!

டெயில் பீஸ்

அருவருப்பின் கதை: வெட்கக் கேடு என்றும் சொல்லலாம், எப்ஸ்டீன் கோப்புகள் என்றும் சொல்லலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டன், இளவரசர் ஆண்ட்ரூவில் தொடங்கி மிக நீண்ட வரிசையில் உலகின் பல அரசியல் கட்சித் தலைவர்கள், பெருந்தலைகள், பிரமுகர்கள், புள்ளிகள் பல கோலங்களில் - 35 லட்சம் பக்கங்கள், 1.80 லட்சம் புகைப்படங்கள், 2 ஆயிரம் விடியோக்கள். இன்னும் வர வேண்டியிருக்கிறதாம். பெருமளவில் சொல்லவும் எழுதவும் கூசுகிற விஷயங்கள். யார் யாருக்கு எந்தெந்த வகையில் தொடர்பு? சொல்லத் தரமில்லை. அவரவராகத்தான் ‘அக்னிப் பிரவேசம் செய்து’ குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்!

TVK leader Actor Vijay's political arena and cinema call sheets - about the current political situation of TVK...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி! தமிழ்நாடு முழுவதும் முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைப்பு!!

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்... ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

வாஷிங்டன் போஸ்ட் ஊழியர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயல் அதிகாரியும் ராஜிநாமா!

சென்னையில் கடும் பனிமூட்டம்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

SCROLL FOR NEXT