தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறித்து மேற்கிந்தியத் தீவுகள் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் மனம் திறந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமர் ஜோசப் 3-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளின் கயானா மைதானத்தில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்த நிலையில், சொந்த மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறித்து ஷமர் ஜோசப் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளது சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளது. மீண்டுமொருமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த கயானா மைதானத்தில் நான் அதிக போட்டிகள் விளையாடியது கிடையாது. ஆனால், அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது முன்னிலையிலும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
முதல் இன்னிங்ஸில் 14 ஓவர்கள் வீசிய ஷமர் ஜோசப் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.