புதுதில்லி: குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் குரங்கம்மை கண்காணிப்புப் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில், குரங்கம்மைக்கு தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் சீரம் இந்திய நிறுவனம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்தார்.
ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை பரவி வரும் நிலையில், நாட்டில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்து விமான நிலையங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, துறைமுகங்களில் எச்சரிக்கை மற்றும் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு போன்றவற்றை உருவாக்குவது குறித்தும், குரங்கம்மை பரவினால், நோயாளிகளை தனிமைப்படுத்துவது, சோதனைக் கூடம் உள்ளிட்ட மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக, குரங்கம்மை என்பது இரண்டு முதல் நான்கு வாரங்களில் கட்டுப்பட்டுவிடும், தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளுடன் நலமடைந்துவிடுவார்கள், குரங்கம்மை பாதித்தவர்களுடன் பாலியல் உறவு, நோயாளியின் உடலில் இருக்கும் புண்களின் தண்ணீர் படுவது, அவர்களது அழுக்கான துணிகளை தொடுவது போன்றவற்றால்தான் அது மற்றவருக்கு பரவும் என்றும் கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்த நாள் வரை இந்தியாவில் குரங்கம்மை பரவியதாக எந்த தகவலும் இல்லை.
எனினும், வரும் வாரங்களில், வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம், நாட்டுக்குள் குரங்கம்மை பரவும் அபாயம் உள்ளதால், தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, உலகம் முழுவதும் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.
அடார் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டு, ஆபத்தில் இருக்கும் பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்ற இந்த நோய்க்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் இந்திய சீரம் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மேலும் விவரங்களுக்காக சீரம் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு ஆண்டிற்குள் மேலும் பல புதுப்பிப்புகள் மற்றும் நேர்மறையான செய்திகள் பகிரப்படும் என்று நம்புவதாக சீரம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் வலிமையை சாதகமாக ஆராய வேண்டும் என்று எச்ஐவி மற்றும் எஸ்டிடி ஆலோசகர் மருத்துவர் ஈஸ்வர் கிலாடா கூறினார்.
இதற்கிடையில், குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அதற்கான பிரத்யோகமான அல்லது சோதனை செய்யப்பட்ட சிகிச்சை அல்லது மருந்துகள் எதுவும் இல்லை, ஆனால் டெகோவிரோமேட் சில வெற்றிகளுடன் முயற்சிக்கப்பட்டது," என்று ஈஸ்வர் கிலாடா கூறினார்.
பாதிக்கப்பட்ட காங்கோ மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சொறி, வீக்கம், நிணநீர் கணுக்கள், காய்ச்சல், தலைவலி, சளி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் ரத்த மாதிரிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய நோய்த்தடுப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.