ஸ்ரீநகர்: பயங்கரவாத சதித் செயல் தொடா்பாக ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து 9 பேர் பலியாகினர், 29 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிபொருள்கள், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் பணியாற்றி வந்த ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்த மருத்துவா் முசாமில் அகமதை ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹரியாணா காவல் துறை கூட்டாக கைது செய்தன.
இதைத்தொடா்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக 360 கிலோ வெடிபொருளை ஜம்மு-காஷ்மீருக்கு காவல் துறை கொண்டு சென்றது. அங்குள்ள நெளகாம் காவல் நிலையத்தில் அந்த வெடிபொருள்களின் மாதிரிகளை காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்கள் குழுவினரும் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வுக்காக பிரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில் முதலில் 8 காவலா்கள் காயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது 9 பேர் பலியானதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலும் வெடிபொருளை ஆய்வு செய்து கொண்டிருந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். இதில், ஸ்ரீநகர் நிர்வாக அதிகாரிகள் இரண்டும் பேர் பலியாகியுள்ளனர்.
வெடிப்பொருள்கள் வெடித்ததில் காவல் நிலையம் பெரும் சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அவர்களை் அடையாளம் காணும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மீட்கப்பட்டுள்ள உடல்கள் ஸ்ரீநகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்த 25 காவலர்கள், பொதுமக்கள் 4 பேர் ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்பொருள்கள் வெடித்ததை அடுத்து மூத்த காவல்துறை அதிகாரிகள் நெளகாம் வந்து சேர்ந்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
360 கிலோ வெடிபொருளும் அந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.