நியூயார்க்: நான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஏழு மாதங்களில் ஏழு போா்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து புலம்பி வரும் டொனால்ட் டிரம்ப், உலக பிரச்னைகளை தீர்க்கும் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்து ஒரு தொலைபோசி அழைப்பு கூட வரவில்லை, உலகை நானே காப்பாற்றனுமா என அடுத்தடுத்து புலம்பியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், டிரம்ப் முதல்முறையாக உரையாற்றினாா்.
அப்போது, ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷிய எரிசக்தியை வாங்குவதை பெரிய அளவில் குறைக்கவில்லை.
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது. இந்த நடவடிக்கை போா் மூலம் ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்தும்.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்க வேண்டுமானால், அந்த நடவடிக்கைகளை ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். ரஷியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் அதேவேளையில், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அமெரிக்கா தலையிடும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விமர்சித்து நிலக்கரியைப் புகழ்ந்துரைத்த டிரம்ப், காலநிலை மாற்றத்தை "உலகில் இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடி" என்று தெரிவித்தார்.
கடந்த கால கருப்பொருள்கள் மற்றும் நீண்டகாலப் பிரச்னைகளை மறுபரிசீலனை செய்தாலும், அமைதியைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளுக்கு ஐ.நா. உதவவில்லை என்ற ஐ.நா. மீதான வெறுப்பு டிரம்ப்பின் வெறுப்பு பேச்சு உக்ரைனில் போர் உள்பட பல்வேறு மோதல்களால் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய விவாதங்களுக்கு மத்தியில் ஒரு புதிய நிலையை எட்டியது.
"நான் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற ஏழு மாதங்களில், ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன், இந்தப் போா்கள் முடிவுக்கு வராது என்று என்னிடம் கூறப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களையும் சமார்த்தியமாக கையாண்டு அந்தப் போா்களை நிறுத்தினேன். அவற்றில் எந்தவொரு போரையும் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. செய்யவில்லை. ஐ.நா. செய்ய வேண்டிய வேலையை, வேறு எந்த நாட்டின் அதிபரோ, பிரதமரோ செய்யாத நிலையில் நான் செய்ததாக டிரம்பு கூறினார்.
ஐ.நா. பொதுச் சபைக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளது. ஆனால் அந்த ஆற்றலுக்கேற்ப ஐ.நா. செயல்படவில்லை. பெரும்பாலான நேரங்களில் வலுவான முறையில் கடிதம் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர், பின்னர் அந்தக் கடிதத்தைப் பின்பற்றுவதும் இல்லை. ஐ.நா.வின் வெற்று வார்த்தைகளும், நடவடிக்கைகளும் போா்களை நிறுத்துவதற்கு உதவாது. போரையும் போர்களையும் நிறுத்துவதற்கான ஒரே தீர்வு நடவடிக்கை மட்டும்தான் என்றார்.
உலக பிரச்னைகளை தீர்க்கும் எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும், ஆனால் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்து ஒறு தொலைபோசி அழைப்பு கூட வந்ததில்லை என்ற புலம்பிய டிரம்ப், ஐ.நா. எனக்கு இயங்காத மோசமான எஸ்கலேட்டர், டெலிபிராம்ப்டரை பரிசளித்து, மிக்க நன்றி என புலம்பினார்.
ஐ.நா.சபைக்கு நான் வந்ததும் நகரும் படிக்கட்டுகளான எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை, நானும் எனது மனைவியும் நல்ல உடல் நிலையுடன் இருப்பதால் இந்த பிரச்னையை சமாளித்ததாக தெரிவித்தார்.
போதாத குறைக்கு நான் பார்த்து படிக்கும் டெலிபிராம்ப்டர் வேலை செய்யவில்லை என்று புலம்பியவர், அந்த டெலிபிராம்ப்டரை இயக்கும் நபர் பெரிய சிக்கலுக்கு ஆளாகப் போவதாக சிரித்தப்படியே தெரிவித்தார்.
டிரம்ப் பேச்சால் எச்சரிலைந்த ஐ.நா.வின் மற்ற உறுப்பினர்கள், அந்த டெலிபிராம்ப்டரை இயக்குவது வெள்ளை மாளிகை ஆள்கள் தான் என விளக்கம் அளித்தனர்.
இருப்பினும், அவரது பேச்சின் போது, பார்வையாளர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர், இருப்பினும் அவ்வப்போது சிரிப்பும் கைதட்டலும் எழுப்பினர். மேலும், டெலிபிராம்ப்டர் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், தனது உரையின் பாதியிலேயே மீண்டும் ஐ.நா. டெலிபிராம்ப்டர்கள் சரியாக செயல்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்றேன் என்று அவர் கூறினார்.
மேலும், ஐ.நா. ஒரு ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று நம்புவதாக தெரிவித்த டிரம்ப், அடுத்த ஆண்டு அமெரிக்கா தனது 250 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இருப்பதாகவும், பிற நாட்டின் தலைவர்களும் இதேபோன்று தங்கள் நாடுகளின் நிறுவனர்களை கௌரவிக்கவும், தங்கள் சொந்த காலசார மரபுகளைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தினார். இன்று இந்த அழகான சபையில் உள்ள ஒவ்வொரு தலைவரும் ஒரு வளமான கலாசாரம், ஒரு உன்னதமான வரலாறு மற்றும் பெருமைமிக்க பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், இது ஒவ்வொரு நாட்டையும் கம்பீரமாகவும் தனித்துவமாகவும் காட்டுகிறது என்று கூறினார்.
எனவே, ஒவ்வொரு தலைவர்களும் நாட்டிற்கும் மக்களுக்குமான புனிதமான கடமையை ஆற்றுவோம். நாட்டிற்கான எல்லைகளைப் பாதுகாப்போம்; பாதுகாப்பை உறுதி செய்வோம்; கலாசாரங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாப்போம்; மேலும் மக்களின் விலைமதிப்பற்ற கனவுகள் மற்றும் சுதந்திரங்களுக்காகப் போராடுவோம், போராடுவோம், போராடுவோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.