ஸ்பெஷல்

வாழ்த்தலாமே சாந்தனுவை.. ரத்தன் டாடாவை பெருமிதத்தில் புல்லரிக்க வைத்த மும்பை இளைஞர்!

RKV

இரவில் நீங்கள் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென நடுவழியில் வாகனத்தில் அடிபட்டு இறந்த நாயொன்றின் சடலத்தைக் கண்டால் என்ன செய்வீர்கள்? அப்படியே அதைச் சுற்றிக் கொண்டு தங்கள் பயணத்தை தொடரக்கூடியவர்கள் தான் நம்மில் அனேகம் பேர். பொறுப்புணர்வு மிக்க சிலர் வேண்டுமானால் கார்ப்பரேஷன் துப்புறவுப் பணியாளர்களை அழைத்து நாயின் சடலத்தை அப்புறப்படுத்தச் சொல்வது கூட நடக்கலாம். அதெல்லாம் தாண்டி இனிமேல் எந்த நாயும் இப்படி அடிபட்டுச் சாகக்கூடாது. நாய்களை நெடுஞ்சாலை அல்லது பொதுவான சாலை விபத்துக்களில் இருந்து எப்படியாவது காப்பாற்றியே தீர வேண்டும் என இரவு பகலாக யோசித்து அதற்கென்று புத்திசாலித்தனமான வழிமுறைகள் எதையேனும் கண்டடையக் கூடியவர்கள் நம்மில் மிக மிகச் சொற்பமானவர்களே!  அப்படிப்பட்டவர்களில் ஒருவரே இந்த சாந்தனு நாயுடு.

மும்பையைச் சேர்ந்த இந்த 27 வயது இளைஞர் அப்படி என்ன செய்து விட்டார்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

2014 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டதாரியான சாந்தனு நாயுடு , தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நிறுவனத்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். பிடித்த படிப்பு, படிப்பிற்கேற்றவகையில் உடனடியாகக் கிடைத்த மனமுவந்த வேலை. பொறியியல் பட்டதாரிகளின் கனவு நிறுவனமான டாடா நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம் என நாட்கள் மிக அழகாகக் கடந்து கொண்டிருந்தன. இந்தச் சமயத்தில் தான் திடீரென ஒரு நாள் மாலையில் அலுவலகத்தில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது நட்ட நடுச்சாலையில் ஒரு நாயின் சடலத்தைக் கண்டேன். நாய் இறந்து சில மணி நேரங்கள் கடந்திருக்கலாம் எனத் தெரிந்தது. அஹை அப்புறப்படுத்த யாரும் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையை என்னால்  தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனிமேல் எந்த ஒரு நாயும் இப்படி வாகனங்களில் சிக்கி இறக்கும் நிலை வரக்கூடாது என யோசித்தேன். அதற்கொரு விடை கிடைத்தது. இனிமேல் தெருநாய்களுக்கெல்லாம் ரிஃப்ளெக்டர்கள் (Reflector) பொருத்தப்பட்ட கழுத்துப் பட்டிகள் அணிவித்து விட்டால் கனரக வாகன ஓட்டிகள் தூரத்தில் இருந்து பார்த்தாலே பாதையின் குறுக்கே நாய்கள் ஏதேனும் இருந்தால் கண்டுபிடித்து விட ஏதுவாக இருக்கும் எனத் தோன்றியது. நினைத்ததை உடனடியாக செயல்படுத்தினேன். நானும் என்னது நண்பர்கள் சிலருமாக நாய்களுக்கான ரிஃப்லெக்டர்கள் பொருத்தப்பட்ட கழுத்துப் பட்டிகளை தயாரிட்து அவற்றைத் தெருநாய்களுக்கு அணிவிக்கத்  தொடங்கினோம்.

எங்கள் முயற்சிக்கு நல்ல மரியாதை கிடைத்தது. எங்கள் முயற்சியைப் பாராட்டி டாடா நிறுவனத்தின் செய்தி மடலில் சாந்தனுவின் புதிய முயற்சி குறித்த பாராட்டுகளும், வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றது.

அந்தச் சமயத்தில் என் அப்பா, என்னிடம் வந்து உனது இந்த புதிய முயற்சி குறித்து நீ ஏன் ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதக் கூடாது? என்று கேட்டார். ஏனென்றால் அவரும் நாய்களின் மீது மிகுந்த பரிவு கொண்டவர்கள் என்பதால் கடிதம் எழுதினால் நல்லது என்றார் அப்பா. எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது, பிறகு யோசித்துப் பார்க்கையில் ஏன் கூடாது?! என்றும் தோன்றியது. சரி கடிதம் எழுதி அனுப்பி விட வேண்டியது தான் என்று முடிவெடுத்து என் கையால் சொந்தக் கையெழுத்தில் ரத்தன் டாடாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு, பிறகு அதை மறந்தும் போனேன்.

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த பின் ஒரு அதிசயம் நடந்திருந்தது.

ஆம், சாந்தனுவும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்திக் கொண்டிருந்த ‘மோட்டோபாவ்ஸ் (Motopaws)' எனும் நாய்கழுத்துப் பட்டை நிறுவனத்திற்கு முழுமையான புரவலராக இருக்க  ரத்தன் டாடா முடிவெடுத்திருந்தார். அதை கடிதம் மூலமாக அவர் சாந்தனுவுக்கும் தெரிவித்திருந்தார்.

கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தவை ‘தெருநாய்களைக் காப்பாற்றுவதற்காக நீ மேற்கொண்டிருக்கும் சேவைப்பணி எனது இதயத்தை ஆழமாகத் தொட்டு விட்டது. அதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கிறது.’ என்று சாந்தனுவின் சேவை மீதான தனது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி இருந்தார் ரத்தன் டாடா.

சாந்தனுவின் வாழ்வில் இது மிகப்பெரிய ஆச்சர்யம் கலந்த ஆனந்த தருணமாகப் பதிவாகி விட்டது. இந்த மகிழ்ச்சியைத் தனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு முகநூலில் பகிர்ந்திருக்கிறார் சாந்தனு.

பகிர்ந்த மாத்திரத்தில் சுமார் 20,000 எதிர்வினைகளையும், 1000 கருத்துரைகளையும் பெற்றுள்ளது சாந்தனுவின் பதிவு.

பலரும் சாந்தனுவின் பொறுப்புணர்வை பாராட்டியதோடு அல்லாமல், ‘ரத்தன் டாடா இன்று இந்திய இளைஞர்கள் பலருக்கும் மிகப்பெரிய முன்னுதாரணமாகத் திகழக்கூடிய நபராக இருக்கிறார். அவரது நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் பலருண்டு அப்படியிருக்கையில் நீ அவருடனே இணைந்து பணிபுரியும் வாய்ப்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளாய், எல்லாம் உனது கர்மா உனக்குத் தந்த பலன் தான். வாழ்த்துக்கள் இளைஞனே!’

- எனப்பலரும் முகநூலில் சாந்தனுவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஓய்ந்து போய் உட்கார நேரமின்றி வேலை வேலை என்று மனிதர்கள் சதா ஓடிக்கொண்டே இருக்கும் தூங்கா நகரமான மும்பையில் நடுச்சாலையில் அனாதையாக இறந்து கிடந்த ஒரு நாயின் சடலத்தைக் கண்டு ஒரு இளைஞனின் மனம் துன்பப்படுவதும்.. வெறும் துன்பப்படுதலோடு அவனது பரிவு முடிந்து விடாமல் அது உயிருடன் இருக்கும் தெருநாய்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடாக முகிழ்வதும் அதற்கு இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவர் உதவ முன்வருவதும் மிகப்பெரிய சாதனை தான் இல்லையா?

இப்படியொரு முயற்சியில் இறங்கி வெற்றி கண்ட சாந்தனுவை நாமும் கூட வாழ்த்தலாமே!

Image Courtesy: HT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT